முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவையில் அமைச்சர் சுஷ்மாவை பேசவிடாமல் எம்.பி.க்கள் அமளி நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்றும் இல்லை

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவிடாமல் மக்களவையில் எம்.பி.க்கள் நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதனால், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் 3-வது நாளாக நேற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மக்களவை தொடங்கி சில நிமிடங்களில் அ.தி.மு.க எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அதேபோல, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கக் கோரி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி.க்களும் முழக்கமிட்டனர்.

வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டதால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கோஷத்துக்கு இடையே சிட்பண்ட் நிறுவனங்களை முறைப்படுத்தும் மசோதாவை நிதித்துறை இணை அமைச்சர் அறிமுகம் செய்தார். ஆனால், எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டதால், அவையில் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. இதனால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

12 மணிக்கு பின் மீண்டும் அவை கூடியது. அப்போது, பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இன்றுள்ள நிகழ்ச்சி நிரல்படி அவையை நடத்தவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க, டி.ஆர்.எஸ், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து மீண்டும் கோஷமிட்டனர். இதனால், மீண்டும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை வெளியிட வந்திருந்தார். ஆனால், அவரைப் பேசவிடாமல் எம்.பி.க்கள் தடுத்தனர்.

அப்போது பேசிய சபாநாயகர், இதுமிகவும் தீவிரமான விஷயம், 39 இந்தியர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவையில் இதை தெரிவித்தாக வேண்டும் சுஷ்மாவை பேசவிடுங்கள் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவையில் எம்.பி.க்கள் சுஷ்மாவை பேசவிடாமல் இடையூறு செய்தனர். என் உரையை படிக்க விடுங்கள், சிறிது பொறுமையாகவும், அமைதியாகவும் இருங்கள் என்று எம்.பி.க்களிடம் அமைச்சர் சுஷ்மா கேட்டுக்கொண்டார்.

சுஷ்மாவின் வார்த்தையைக் கேட்டு அ.தி.மு.க எம்.பி.க்கள் அமைதிகாத்து இருக்கையில் அமர்ந்துகொண்டனர். ஆனால், காங்கிரஸ், ஆம்ஆத்மி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இதுபோன்ற அரசியலில் ஈடுபடாதீர்கள், உணர்வுபூர்வமாக இருங்கள், நீங்கள் செய்யும் செயல் வேதனையளிக்கிறது என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுக்கு நேற்றும் அவையில் சமூகமான சூழல் இல்லை, யார் நோட்டீஸ் அளித்துள்ளது, யார் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது என்பதைக் கூட அறியமுடியவில்லை. எம்.பிக்கள் அனைவரும் எழுந்து நிற்பதால், இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பும் நடத்தமுடியாது. ஆதலால் அவையை ஒத்திவைக்கிறேன் என சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து