முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் திமுக வரலாறு காணாத அமளி: தி.மு.க.வினரை கூண்டோடு வெளியேற்றினார் சபாநாயகர்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டசபையில் ரதயாத்திரையின் பெயரால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். வரலாறு காணாத அளவில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார்.

கூச்சல் - குழப்பம்...

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீ ராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின்’’ சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராம ராஜ்ய ரத யாத்திரை குறித்து பிரச்னை எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐந்து மாநிலங்களில் அமைதியாக நடக்கும் ரத யாத்திரை  விவகாரத்தில் தி.மு.க. அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறது என்று  குற்றம்சாட்டினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷங்கள் எழுப்பி ரகளையில்  ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தலைமையில்தி.மு.க.வினர் அனைவரும் எழுந்து  நின்று கோஷங்களை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

தமிமுன் அன்சாரி...

தி.மு.க உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் அனைவரும் அமருங்கள் என்று  அமைதிப்படுத்தினார். எதிர்கட்சி தலைவரை பார்த்து நீங்கள் ஒரு பிரச்னை குறித்து  பேசினீர்கள். அதற்கு அரசு தரப்பில் உரிய பதிலை முதல்வர் அளித்தார். அவர் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றால் நான் என்ன செய்வது என்று சபாநாயகர் பேசிகொண்டிருக்கும் போதே, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் தமிமுன் அன்சாரி தனது இருக்கையில் இருந்து எழுந்து நேராக சபாநாயகர் இருக்கைக்கு முன்பு கோஷம் எழுப்பினார். பின்னர் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பும் பதட்டமான சட்டசபை காணப்பட்டது.

சபாநாயகர் அறிவுறுத்தல்

சட்டசபையில் இப்படி நடந்துகொள்வது முறையல்ல உங்கள் இருக்கைக்கு செல்லுங்கள்  என்று அன்சாரிக்கு சபாநாயகர் தனபால் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அன்சாரி  தனது இருக்கைக்கு சென்று தொடர்ந்து கோஷம் எழுப்பினார். பின்னர் வெளிநடப்பு  செய்தார். இன்னொரு பக்கம் தி.மு.க.வினரும் அரசுக்கு எதிராக முழக்கங்களை  எழுப்பியதால் சபாநாயகர் அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். இந்த  முழக்கங்களிடையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும்  கேட்கவில்லை. அப்போது சபாநாயகர் தனபால் நீங்கள் (ஸ்டாலின்) இந்த பிரச்சினையை எழுப்ப  அனுமதி கேட்டீர்கள் நானும் அதற்கு அனுமதி அளித்தேன். அதுவும் உங்களை  முழுமையாக பேச அனுமதி கொடுத்தேன்.

ஒத்துழைப்பு தாருங்கள்

இதற்கு முதலமைச்சரும் பதில் சொல்லி விட்டார். இந்த நிலையில் நீங்கள் அவையை  நடத்த விடாமல் இப்படி செய்வது முறையல்ல. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்  என்று தெரிவித்தார். இதனை ஏற்காமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷங்களை   எழுப்பிய வண்ணமிருந்தனர். பேரவையில் இப்படி நடந்துகொள்வது  முறையல்ல. பேரவையை நடத்தவிடாமல் செய்துவது முறையல்ல - உங்கள் பிரச்சனை குறித்து  முதல்வர் பதில் அளித்தும் இப்படி நீங்கள் செய்யலாமா? அவையை நடத்தவேண்டிய  பொறுப்பு எனக்கு உள்ளது அவையை நடத்த விடுங்கள். இல்லை என்றால் வேறு  நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவே ஒத்துழைப்பு தாருங்கள் என்று  சட்டசபையில் சபாநாயகர்  மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

மசோதா தாக்கல்...

ஆனால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அதனை பொருட்படுத்தாமல் முழக்கமிட்டு ரகளையில்   ஈடுபட்டதால் சபையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டது. நேற்று  பகல் 11.15 மணிக்கு தொடங்கி அமளி தொடர்ந்து நீடித்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தன் இருக்கையை விட்டு எழுந்து. அவையை  நடத்த விடாமல்செய்வது சரியல்ல. இனி நான் அடுத்த நிகழ்ச்சி நிரலுக்கு செல்கிறேன்  என்று பேரவை தலைவர் நிகழ்ச்சி நிரலுக்கு செல்கிறேன் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரை சட்டமுன்வடிவு ஒன்றை தாக்கல் செய்ய அழைத்தார். கடும் கூச்சல் குழப்பங்களிடையே தமிழ்நாடு தனியார் மருத்துவ நிலுவைகள் (முறைப்படுத்துதல்) சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

வெளியேற்றும்படி உத்தரவு

இதற்கிடையே சபாநாயகர் தி.மு.க.வினரை உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர  வேறு வழி இல்லை. அந்த நிலைமைக்கு என்னை தள்ளி விட்டீர்கள். மீண்டும்  எச்சரிக்கிறேன். மீண்டும் எச்சரிக்கிறேன். அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்  என்று கேட்டுக்கொண்டார். அப்படியும் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையை  நடத்தவிடாமல் கலாட்டா செய்தனர். இதனால் தி.மு.க. உறுப்பினர்கள்  அனைவரையும் வெளியேற்றும்படி சபைக்காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை  தொடர்ந்து பேரவை காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர். தி.மு.க.  எம்.எல்.ஏ.க்களின் அமளிதுமளி காரணமாக நேற்று பகல் 11.15 மணியில் இருந்து 11.38  மணி வரை சுமார் 25 நிமிடங்கள் சட்டசபையின் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின.  தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளி  நடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து