முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறையை தொடர்ந்து 2ஜி வழக்கில் சி.பி.ஐ.யும் மேல்முறையீடு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறையை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ.யும் நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.

ரூ.30,984 கோடி இழப்பு...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சி.பி.ஐ குறிப்பிட்டிருந்தது.

14 பேரும் விடுதலை...

மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், சி.பி.ஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

சி.பி.ஐ.யும் மேல்முறையீடு...

இந்நிலையில் இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவானது இந்த வார இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறையினைத் தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐயும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து