முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமராஜ்ய யாத்திரை பெயரால் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : ராமராஜ்ய யாத்திரை பெயரால் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினரிடம்...

தமிழக சட்டசபையில் ராம்ராஜ்ய ரதயாத்திரை தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய பிரச்னைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
ராம் ராஜ்ய ரத யாத்திரை தமிழ்நாட்டில் வருவதற்கு சில முஸ்லீம் அமைப்புகளும், தமிழ் ஆதரவு அமைப்புகளும் மற்றும் சில அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று கோரி காவல் துறையினரிடம் மனுக்கள் அளித்தனர். மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் இந்த ரத யாத்திரைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. அம்மாநிலங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இதுவரை இந்த யாத்திரை கடந்து வந்துள்ளது.

முன்னெச்சரிக்கை...

இந்த ரத யாத்திரை தமிழ்நாட்டிற்குள் வருவதை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், திருநெல்வேலி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 121 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு சொல்கிறேன், ஐந்து மாநிலத்திலே இந்த ரத யாத்திரை நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றார்.

அரசியல் சாயம்...

இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் முதல்வர் பேசும்போது திடீரென குறுக்கிட்டனர். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும்போது எங்களுடைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள். நான் பேசும்போது, தொடர்ந்து குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்தினார். அதை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இங்கே அரசியல் சாயம் பூசுவது சரியல்ல.

அரசியல் ஆதாயம்...

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் எல்லா மதத்திற்கும் சம உரிமை உண்டு. அதை யாரும் தடை செய்ய முடியாது. ஜனநாயக நாடு. இந்த மதம், அந்த மதம் என்று வேறுபடுத்தி காட்ட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. அந்த கடமையை கடைப்பிடித்து தான் இங்கே பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல, இந்த ரதம் பல மாநிலங்கள்; மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறது. மீண்டும் இங்கே முடித்து விட்டு கேரளா வழியாக தான் செல்கிறது. இதிலே எவ்வித பிரச்சனையும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. நீங்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள். அதுதான் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து