முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல நாடுகளின் வளர்ச்சிக்கு காரணம் என்ன ? இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

யாழ்ப்பாணம் : இலவசங்கள் எதையும் வழங்காததால் உலகில் பல நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன’’ என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப மையத்தை மாணவர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமன விழா கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியதாவது:

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எமக்கு பல அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு காண வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. மனிதர்களை நேசிப்பதும் சிநேகமுடன் வாழ்வதும் ஏனையவர்களுக்கு உதவி புரிவதும் மனிதர்களிடம் காணப்பட வேண்டிய அடிப்படைப் பண்புகளாகும். அவை மனிதர்களுடைய பிரதான பொறுப்பும் கடமையுமாகும். நான் அந்தக் கொள்கையுடன் வாழ்வதனாலேயே இத்தகைய முக்கிய சந்தர்ப்பங்களில் பங்குகொள்கிறேன்.

இப்பாடசாலை 100 வருடங்களை விட பழைமையானது. இங்கு உரை நிகழ்த்தியவர்கள் இப்பாடசாலையில் சிங்கள மாணவர்கள் கூட கல்வி கற்றதாக குறிப்பிட்டார்கள். பாடசாலை என்பது கல்வியை கற்பிக்கும் இடமாகும். மொழி, இனம் அல்லது ஏனைய பேதங்களின்றியே கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். கல்வியை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் எந்த வேறுபாடுகளும் காணப்படக் கூடாது. உலகின் எந்தவொரு நாட்டிலும் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அந்நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுத்தல் அவசியமாகின்றது. கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்நாடுகளில் பிரச்சினைகள் குறைகின்றன.

எந்தவொரு நாட்டிலும் பொருளாதார, அரசியல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தலும் ஒரு காரணமாகும். இப்பாடசாலையில் நீச்சல் குளம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்கு நான் உதவி வழங்க நினைக்கிறேன். அதற்கான திட்டத்தையும் மதிப்பீட்டையும் எனக்கு அனுப்பி வையுங்கள். கல்விக்கு நாம் முன்னுரிமை அளித்தல் வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் 47 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அந்தந்த நாடுகளிலும் எமது நாட்டிலும் காணப்படும் கல்வி முறைகள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். எமது நாட்டில் முதலாம் தரத்திலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது என்பதை நான் சுட்டிக் காட்டினேன். சில தலைவர்கள் தமது நாடுகளில் நான்கு வருடங்கள் இலவச கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்கள். சிலர் 8 வருடங்கள் இலவச கல்வியை வழங்குவதாகவும் மேலும் சிலர் 15 வயது வரை இலவசக் கல்வியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெரும்பாலான நாடுகள் பல்கலைக்கழக கல்வியை இலவசமாக வழங்குவதில்லை எனவே குறிப்பிட்டார்கள்.

சீனா ஒரு வளர்ச்சியடைந்த நாடாகும். ஆனால் சீன பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை. எமது அரசாங்கம் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் வழங்குகின்றது. ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு நட்டம் அடைந்தாலும் மக்களுக்கு சேவையாற்றுகின்றது. பல உலக நாடுகள் சகல விசயங்களையும் இலவசமாக வழங்காத காரணத்தினாலேயே அவை வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் அப்படி நடைபெறுகின்றதென்பதனால் நாம் இலவசமாக வழங்கும் எதனையும் கட்டுப்படுத்தப் போவதில்லை. தொடர்ந்தும் வழங்குவோம்.

இன்று நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலானோர் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் அரச வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துகின்றனர். அவ்வாறு ஈடுபடுவதற்கு அவர்களது தவறு ஏதும் காரணமல்ல. அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி முறையிலேயே தவறு காணப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களினூடாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நிலைமையை நாம் மாற்றி அமைப்போம். கடந்த வாரம் ஜப்பான் சென்றபோது அந்நாட்டு பிரதமருடனும் பேசினேன். நமது பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பதை அப்போது அறிந்து கொண்டேன்.

அவர்களுக்கு தொழில்நுட்ப பட்டதாரிகள் முக்கியமாக தேவைப்படுகின்றனர். எமது நாட்டின் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்பு உள்ளது. நான் அது தொடர்பாகவும் கலந்துரையாடினேன். ஆகையினால் எமது கல்விக் கொள்கைகளை உருவாக்குகையில் தொழில்நுட்ப பாடங்களையும் விஞ்ஞான பாடங்களையும் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களையும் பயில நாம் முதலிடம் அளிக்க வேண்டும்.

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? பிரதமர் யார்? என்பது மக்களின் முக்கிய பிரச்சினையல்ல. நாட்டை நேசிக்காத, அதிகாரங்களை பற்றி மாத்திரமே சிந்திக்கும் அரசியல்வாதிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நான் அந்த நம்பிக்கையை உடைத்து எறியவில்லை. மக்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும்.

இன்று நான் இங்கு வரும்போதும் காணாமல்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்க சட்டம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வலுவலகம் தற்போது தனது கடமைகளை ஆரம்பித்துள்ளது. எனவே இதுதொடர்பாக நாம் மேலும் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் இணைந்து நாட்டின் நன்மைக்காக செயலாற்றுவோம். இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.  இவ்வாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து