முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிராக பார்லி.யில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

இதுகுறித்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சே தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூரியாவிடம் , ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கூட்டணி அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 51 உறுப்பினர்களும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியின் 4 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி கவர்னராக வெளிநாட்டைச் சேர்ந்தவரை பிரதமர் ரணில் நியமித்தார்.இதேபோல், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பங்குப் பத்திரங்களில் முறைகேடு செய்தோரை பாதுகாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சட்டம்-ஒழுங்குத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதமர் ரணில்,இலங்கையில் இம்மாத தொடக்கத்தில் மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்.

எனவே, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்க வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் எதிர்க்கட்சி கூட்டணி செய்தித் தொடர்பாளர்.

இலங்கையின் கண்டி, அம்பாறை மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் சூறையாடப்பட்டன. அவர்களது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக, சட்டம்-ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணிலிடம் இருந்து அதிபர் சிறிசேனா பறித்தார்.

இதையடுத்து, ரணிலுக்கு எதிராக ராஜபட்சே ஆதரவு எதிர்க்கட்சி கூட்டணி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அப்போது ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவரது கட்சி எம்.பிக்களும் கையெழுத்திட்டிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டணி தெரிவித்திருந்தது. ஆனால், அவ்வாறு யாரும் கையெழுத்திடவில்லை.

இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சேவின் புதிய கட்சி, ஆளும் கூட்டணியைத் தோற்கடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதேநேரத்தில், பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்க வேண்டும் என்று ராஜபட்சே விடுத்த கோரிக்கையை அதிபர் சிறிசேனா நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து