முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களின் தொடர் அமளியால் பார்லி.14-வது நாளாக முடங்கியது

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை நேற்றும் 14-வது நாளாக  முடங்கியது. இதன் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

4 நாட்கள் ஆகியும் ...
மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர் கட்சியும் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளன. ஆனால், எம்.பி.க்கள் தொடர் கூச்சல் காரணமாக, நோட்டீஸ் அளித்து 4 நாட்கள் ஆகியும் நேற்றும் விவாதம் நடைபெறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க கட்சி எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி.க்களும் நேற்று சபை தொடங்கியவுடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், காலையில் கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது.

சபாநாயகர் வேண்டுகோள்
சிறிதுநேரம் ஒத்திவைப்புக்குப்பின் மீண்டும் அவை கூடியபோதும், அப்போதும் அ.தி.மு.க, டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அப்போது, பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர இரு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்து இருக்கிறார்கள். உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து சபை நடந்தால் மட்டுமே தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்றார்.

அமைதி காக்க...
அப்போது எழுந்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், மத்திய அரசு அனைத்து விவகாரங்களுக்கும் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறது. வங்கி மோசடி, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஆகியவற்றில் விவாதமும் நடத்தத் தயார். உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்தார். எம்.பி.க்கள் அனைவரும் இருக்கையில் அமராமல் இருந்தால் எப்படி தீர்மானத்தின் விவாதம் நடத்தஅனுமதிக்க முடியும் என்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பினார்.

அவை ஒத்திவைப்பு...
ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கோ, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். உடனே இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் தங்கள் கையை உயர்த்தி தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரியப்படுத்தினர். அப்போது, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிந்த தெலுங்குதேசம் கட்சி எம்.பி. தோட்டா நரசிம்மன், தீர்மானத்தை விரைவாக விவதத்துக்கு எடுக்க வலியுறுத்தினார். ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டு வந்ததால், தன்னால், நேற்றும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூறிய அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து