முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டுப்போன பொருட்கள் கிடைக்க வழிபடும் சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோயில்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் நகரை அடுத்து நடுப்பட்டி என்னும் கிராமத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் காவல் தெய்வமாக வழக்குகளைத் தீர்க்கும் நீதிபதியாகவும்,  தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் தண்டல் நாயகமாக மிகப் புகழுடன் விளங்கி வருகிறார். இங்கு துரிஞ்சி மரங்களும், அசோக மரங்களும், கீரி மரங்களும், செவ்வலரிச் செடிகளும் நிறைந்து காணப்படும் தோப்பாக விளங்குவதால் இதனை சிங்காரத்தோப்பு என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவுடைய அழகிய வனத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் என்று எழுந்தருளினார் என்பது யாருக்குமே தெரியாது.

ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்த காலத்தில் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் வழியே புகை வண்டி பாதை அமைத்தனர்.  மொரப்பூரைத் தாண்டி சிந்தல்பாடி வரை அந்த இருப்புப்பாதை போடும் பணி நடந்து கொண்டிருந்தது. இருப்புப் பாதை அமைக்கும் பணி சிங்காரதோப்பு வழியாகவும் நடைபெற்றது.  தோப்பின் அருகே தண்டவாளங்களை பொருத்தி முடிக்கும் போது இரவு வந்தது.  பணியாளர்கள் பணிகளை நிறுத்தி விட்டு தங்கும் இடத்திற்குச் சென்றனர்.  காலையில் வந்து பார்க்கும்போது தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு இடமாறிக் கிடந்தன.  யார் செய்த வேலை என அதிகாரிகள் விசாரித்தனர்.  தமக்கு எதுவும் தெரியாது என அப்பகுதி மக்கள் கூறினர். 

ஒருநாள் வேலை வீணாகி விட்டதே என்ற கவலையோடும், சினத்தோடும் மீண்டும் தண்டவாளங்களை பொருத்தி முடித்து பின்னர் தங்கள் இருப்பிடம் சென்றனர்.  அன்று இரவு பணியாளர் ஒருவரின் கனவில் அருள்மிகு. முனீஸ்வரர் தோன்றி, தான் இங்கு குடி கொண்டிருக்கும் சிங்காரத்தோப்பை காட்டி அங்கே தனக்கொரு கோயில் எழுப்ப வேண்டும் எனப் பணிந்தார்.  அரசுப் பணியாளர்களும் தாம் கனவில் கண்ட சிங்காரதோப்பு அருள்மிகு. முனீஸ்வரருக்கு களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் ஆன சிலை செய்து மேடை மீது முறைப்படி அமர்த்தி வழிபட்டனர்.  அதன் பிறகே அவர்கள் இருப்புப் பாதை அமைக்கும் பணி இடையூரின்றி சிறப்பாக நிறைவுற்றது.  அதனால் மகிழ்ந்த பணியாளர்கள் அன்று முதல் ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தன்று முனீஸ்வரர் ஆலயத்திற்கு வருந்து வழிபடுகின்றனர்.  இப்பூஜைக்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இங்கு சுமார் 21 அடி உயரமுள்ள நீண்ட மேடை மீது இரண்டு முனீஸ்வரர் சிலைகள் உள்ளன.  தென்புறமுள்ள சிலை 11 அடி உயரமும், வடபுறமுள்ள சிலை  7 அடி உயரமுடன் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.  மேடை மீது குதிரைகளம், சிப்பாய்களும், பாம்புபிடாரனும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.  இரண்டு முனீஸ்வரர்களுக்கும் முன்னால் மேடையின் மீது இரண்டு கற்சிலைகள் உள்ளன.  அவற்றின் பழமையை பார்க்கும்போது அவை இரண்டும் ஆதியில் இருந்தே முனீஸ்வரர் சிலையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.  இரண்டு முனீஸ்வரர்களுக்கு எதிரில் நிறைய சூலங்களும் வேல்களும் நடப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கிராம மக்கள் சுவாமிக்கு மாவிளக்கு எடுத்து விழா கொண்டாடுகின்றனர்.  ஆடி மாதம் 18-ம் தேதியன்று பெருக்கன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.  ஆவணி மாதம் ஆயுத பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப்பத்திருநாளில் நூற்றுக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றி முனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகிறது.  மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.  தை மாதம் பொங்கல் விழாவின் போது பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.  மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று பவுர்ணமியும் சேர்ந்த நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றது.  பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது.

 குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தங்களுக்கு மக்கள் செல்வத்தை தந்தருள வேண்டியும், நிலத்தகராறு மற்றும் குடும்பத் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நீதிபதியாகவும், தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித்தர மறுப்பவர்கள் போன்றவர்களைத் தண்டிக்கவும் , தங்கள் எதிரியை பழி வாங்கவும் முனீஸ்வரனை வேண்டி முறைப்பாடு செய்கின்றனர்.  அவ்வாறு வேண்டுபவர்கள் ஒரு கோழியைக் கொண்டு வந்து எதிரிலுள்ள கீரி மரத்தில் கட்டித் தொங்க விடுகின்றனர்.  அத்துடன் வேலுக்குப் பூஜை செய்து, அதனை தலைகீழாக நட்டும் வைக்கின்றனர்.  பல தேவைகள், ஏக்கங்கள், தாக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  தங்கள் குறைகள் நீங்கிய பிறகு பொங்கலிட்டு, கோழியோ ஆடோ அறுத்து படைக்கின்றனர்.  பலருக்கும் அன்னதானம் செய்கின்றனர்.  தலைகீழாக நட்ட வேலை பிராத்தனை தீர்ந்தவுடன் மறுபடியும் பூஜை செய்து மீண்டும் சரியாக நட்டு வைக்கின்றனர்.

தொகுப்பு : குமரவேல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து