முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களின் தொடர் அமளியால் 15-வது நாளாக முடங்கிய மக்களவை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால், மக்களவை 15-வது நாளாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 5-வது நாளாக விவாதத்துக்கு ஏற்கப்படவில்லை. திங்கள்கிழமை ராமநவமி என்பதால், அன்று பாராளுமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டு, செவ்வாய்க்கிழமை மீண்டும் அவை கூடும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அவை தொடங்கியவுடன், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவையில் உறுப்பினர்கள் அமைதி காத்தால்தான் மற்ற பணிகளை நடத்த முடியும் என்று எம்.பி.க்களிடம் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு அதிக இடஒதுக்கீடு வழங்கக் கோரி டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்களும் கோஷமிட்டனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரி தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் எம்.பி.க்களும் ,எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பீகார்  மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பப்புயாதவ் எம்.பியும் பதாகையை ஏந்தி முழக்கமிட்டார்.

இந்த கூச்சலுக்கும், குழப்பத்துக்கும் மத்தியில் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால், எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்திவைத்தார். 11 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது. அப்போது பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடிப்பதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டால், தீர்மானத்துக்கு யார் ஆதரவு தருகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க இயலாது. குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால்தான் அவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்த அனுமதிக்க முடியும். விவாதம் நடத்த அரசு தயார் என்கிறது. ஆனால், உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், தொடர்ந்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள்முழுவதும் ஒத்தி வைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதனால், தொடர்ந்து 15-வது நாளாக மக்களவை நேற்று முடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து