முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் தம்பதிகள் தொடர்ந்த நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் தனுசுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், தங்களது பராமரிப்புச் செலவுக்காக தனுஷ் பணம் தர வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் தனுஷ் முறையிட்டிருந்தார். இதில், தன்னுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தனுசுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஏற்று, அத்தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை எனவும், இந்த போலி ஆவணங்களின் அடிப்படையில்தான் தனுசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும் கூறி, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மதுரைக் கிளையில் மனு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக தனுசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அத்தம்பதியர் கோரியிருந்தனர். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு நேற்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி , போலி ஆவணங்கள் விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்தவை. அதனால், தம்பதியர் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பை நாடலாம். மனுதாரருக்கு இங்கே நிவாரணம் வழங்க முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து