முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் திரும்ப அழைப்பு

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

பிரஸ்ஸல்சிஸ், முன்னாள் உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில், ரஷியாவுக்கான தனது தூதரை ஐரோப்பிய யூனியன் அமைப்பு திரும்ப அழைத்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அந்தக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய யூனியனின் 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
அப்போது, பிரிட்டனில், ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலின் பின்னணியில் ரஷிய அரசு இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், முன்னாள் உளவாளி மீதான நச்சுத் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரை திரும்ப அழைக்கவும் தலைவர்கள் முடிவு செய்தனர். யூனியன் அளவில் மட்டுமின்றி, உறுப்பு நாடுகள் தனித் தனியாகவும் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைககளை மேற்கொள்ளும் என்று லிதுவேனியா அதிபர் டாலியா கிரைபாஸ்கெய்டே தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த வாரத்திலிருந்து ஏராளமான நாடுகள் தங்களது தேசிய அளவிலேயே ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும்' என்று கூறினார்.

எனினும், தூதரை வாபஸ் பெறுவது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆர்டியோம் கொஷின் தெரிவித்தார். முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று குற்றம் சாட்டிய பிரிட்டன், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்கள் நாட்டிலிருந்து 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், ரஷியாவுடனான தங்களது ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தது.

இதற்குப் பதிலடியாக, 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்ட ரஷியா, இருதரப்பு அறிவியல், கலாசார ஒத்துழைப்புக்கான பிரிட்டிஷ் கவுன்சிலையும் மூடியது. இந்தச் சூழலில், ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரும் திரும்ப அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து