முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பாவை வீழ்த்தவே லிங்காயத்து பிரசாரம்: கர்நாடக அரசு மீது அமித் ஷா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: எடியூரப்பா கர்நாடக முதல்வராவதைத் தடுக்கும் நோக்கிலேயே லிங்காயத்து விவகாரத்தை அந்த மாநில அரசு கையில் எடுத்துள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

வீர சைவ லிங்காயத்து மக்களை தனி மதத்தினராக அறிவிக்கக் கோரும் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, இதுவரை அக்கோரிக்கையை முன்வைக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தற்போதே ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டன. ஆட்சியை இழந்து விடாமல் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகளின் தொடர்ச்சியாக கர்நாடகத்திலும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முனைந்து வருகிறது.

இத்தகைய சூழலில், சித்தராமையா தலைமையிலான மாநில அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. அதாவது, சிவனை வழிபடும் லிங்காயத்து சமூகத்தினரை தனி மதத்தவராக அங்கீகரிக்கக் கோரி அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக அரசு பரிந்துரைகளை அனுப்பியது.

பாஜகவின் முதல்வர் எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாஜகவுக்கு அந்த சமூகத்தின் வாக்கு வங்கி கணிசமான அளவில் உள்ளது. அதைத் தகர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முடிவை கர்நாடக அரசு மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, திப்தூர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தென்னை உற்பத்தியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் 3,781 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது இன்னல்களைப் போக்க எந்த நடவடிக்கையையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த நிலை மாறும்; ஒவ்வொரு விவசாயியின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்.

காங்கிரஸ் கட்சி தற்போது மூழ்கி வருகிறது. அதை மீட்டெடுக்க கடைசி அஸ்திரமாக பிரித்தாளும் சூழ்ச்சியை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. புதிய மதத்தை தோற்றுவித்து பிரிவினையை ஏற்படுத்த சித்தராமையா முயலுகிறார். இந்த நடவடிக்கையின் பின்னணியில் எடியூரப்பாவை முதல்வராக வரவிடக்கூடாது என்பதுதான் பிரதான நோக்கமாக உள்ளது. லிங்காயத்து மக்கள் மீது இவ்வளவு பேரன்பு கொண்ட சித்தராமையா கடந்த 5 ஆண்டுகளாக தனி மதம் தொடர்பான கோரிக்கையை முன்வைக்காதது ஏன்? இத்தகைய பிரிவினை நடவடிக்கைகளைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறாரா?

பிரிவினைக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி பாஜகவை விமர்சிப்பதற்கு முன்னதாக காங்கிரஸின் செயல்பாடுகளை ராகுல் காந்தி எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் அமித் ஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து