முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைபீரியா வணிக வளாக தீ விபத்துக்கு பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலகல்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

 மாஸ்கோ, ரஷியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு 64 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று கெமரோவோ பகுதி ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சைபீரியாவில் கெமரோவோ நகரில் உள்ள வின்டர் செரி வணிக வளாகத்தில் மார்ச் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வார விடுமுறை என்பதால் பொழுதுபோக்கிற்காக அந்த வணிக வளாகத்தில் பெற்றோர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர்.

தீ விபத்தை எச்சரிக்கை செய்யும் கருவி வேலை செய்யவில்லை என்பதால் பெரும்பாலானோருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. நான்கு மாடிகளைக் கொண்ட அந்த வணிக வளாகம் முழுவதும் தீ பரவியதையடுத்தே பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

இந்த கோர விபத்தில் 64 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதில், 41 பேர் குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தை ரஷிய அதிபர் புடின் நேரில் சென்று ஆய்வு செய்தார். வணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான மெத்தன போக்கால்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார். இந்த கோர விபத்துக்கு காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், வணிக வளாக தீ விபத்துக்கு பொறுப்பேற்று கெம்ரோவோ பகுதியில் நீண்ட காலமாக ஆளுநராக பணியாற்றி வந்த அமன் டுலியேவ் (73) தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிக வளாக தீ விபத்தில் இத்தனை குழந்தைகள் இறந்த பின்னரும், என்னால் கனமான மன அழுத்தத்துடன் பணியாற்ற முடியாது. அதற்கு ஒரே வழி, எனது பதவியை ராஜிநாமா செய்வதுதான். அதற்கான கடிதத்தை அதிபர் புடினிடம் ஏற்கெனவே கொடுத்து விட்டேன் என்று அந்த அறிக்கையில் அமன் டுலியேவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து