முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

128 அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது சீனா பொருளாதார போர் மூளும் அபாயம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பழங்கள், பன்றி இறைச்சி உள்ளிட்ட 128 பொருள்களுக்கு 25 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் இரும்பு உருக்கு பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்ததற்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அதன் தொடர்புடைய 120 பொருள்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், பன்றி இறைச்சி உள்ளிட்ட 8 பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக இறக்குமதி வரி விதித்துள்ளதற்கு பதில் நடவடிக்கையாகவே மத்திய அமைச்சரவை இந்த முடிவுகளை மேற்கொண்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன இறக்குமதிப் பொருள்களால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தாம் ஆட்சிக்கு வந்தால் சீன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு பொருள்களுக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க அவர் முடிவு செய்தார்.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 6,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் 23-ஆம் தேதி கையெழுத்திட்டார். அத்துடன், அமெரிக்காவில் சீன மூதலீடுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இந்த முடிவுகள் அமைந்துள்ளதாக சீனா குற்றம் சாட்டியது. மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், பன்றி இறைச்சி போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச்சலுகைகள ரத்து செய்வதாக சீனா கடந்த வாரம் அறிவித்தது.

இந்தச் சூழலில், 128 பொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை சீனா தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பொருளாதாரப் போர் மூளும் என்ற அச்சம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து