முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தங்கள் மீதான பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த இந்தியா - ரஷ்யா முடிவு

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: பாதுகாப்புத் துறை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்துவது என இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன. தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் விவகாரத்திலும் இரு நாடுகளும் விரைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன.

இந்திய ராணுவத்தில் உள்ள பெரும்பாலான தளவாடங்களும், ஆயுதங்களும் ரஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை. அவ்வாறு தருவிக்கப்பட்ட பல ஆயுதங்களைத்தான் மேம்படுத்தி இந்திய பாதுகாப்புத் துறை பயன்படுத்தி வருகிறது.

இரு நாடுகளும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும், பல்வேறு தருணங்களில் ரஷியாவில் இருந்து தளவாடங்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது. இதனால், இந்தியாவின் ராணுவ செயல்பாடுகள் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்கோ மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஷியா சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மான்ட்டுரோவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்தும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இருதரப்பும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, தொழில் முதலீடுகளை பரஸ்பரம் அதிகரிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.

இந்தச் சூழலில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சோய்குவைச் சந்தித்து நிர்மலா சீதாராமன் பேசினார். வரும் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சியில் ரஷியா பங்கேற்பது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரூ.40,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ரக ஏவுகணைகள் கொள்முதல் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே இறுதிசெய்யப்படாமல் உள்ளது. அதுதொடர்பாக இரு அமைச்சர்களும் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் தளவாடக் கொள்முதல் நடவடிக்கைகளில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு ரஷிய அமைச்சரிடம் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். அதனைப் பரிசீலிப்பதாக ரஷியத் தரப்பிடம் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்தத் தகவல்களை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ரஷியா வந்துள்ள வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோ சுவான் லிச், செர்பிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் வூலின் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து