முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை தண்டனைக்கு தடை கோரும் பிரேசில் முன்னாள் அதிபரின் மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பிரேசில்: சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டாசில்வா தாக்கல் செய்யத மனுவை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபராக இருந்தவர் லூயிஸ் இனாசியோ. இவரது ஆட்சிக் காலத்தில் அரசின் ஒப்பந்தங்களைப் பெற பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு சட்ட விதிமுறைகளை மீறி அனுமதியளித்தாக இனாசியோ மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு, லஞ்சமாக அவர் கடற்கரை ஓரத்தில் அடுக்குமாடி குடியிருப்பை பெற்றது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் 12 ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பிரேசிலின் தற்போதைய சட்டப்படி சிறை தண்டணை விதித்த பிறகு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தாலும் குற்றவாளி உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
இந்த நிலையில், ஊழலில் ஈடுபட்ட இனாசியோவை உடனடியாக சிறைக்கு அனுப்பவும், வரும் தேர்தலில் அவர் போட்டியிடவும் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி பிரேசிலின் முக்கிய நகரமான சாவ் பாவ்லோவில் 20,000 பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

லஞ்ச வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபரை உடனடியாக சிறையில் அடைக்கக் கோரி 5,000-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திடம் மனு அளித்தனர். இதைத் தவிர, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டன.

நடப்பாண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், இனாசியோவுக்கு எதிரான இந்த தீர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இந்த போராட்டம் அவரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அக்டோபரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இனாசியோ வெற்றி பெருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அவரது தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனவும் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தனக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சமூக மற்றும் அரசியல் அளவில் அதிக அழுத்தங்கள் நிறைந்த முன்னாள் அதிபரின் இந்த மனு உச்ச நீதிமன்றத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக இருந்தது.
இந்த நிலையில் இனாசியோவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள சூழலிலும், இனாசியோவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து