முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை அணி மோதல்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக  2 முறை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜாஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மே மாதம் 27-ம் தேதி வரை இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. 2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. அவற்றோடு நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

8 அணிகளும் 18 வீரர்களை தக்க வைத்து கொண்டது. மீதியுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும். மே 20-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகின்றன. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மே 22-ம் தேதி குவாலிபையர் - 1 ஆட்டம் மும்பையிலும், மே 23-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் மற்றும் மே 25-ம் தேதி குவாலிபயர் - 2 ஆட்டம் புனேவிலும், மே மாதம் 27-ம் தேதி இறுதிப் போட்டி மும்பையிலும் நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். வீரர்கள் ஏலத்துக்கு பிறகு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட அணிகள் விளையாடுகின்றன.

2 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதால் தமிழக ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இரு அணிகள் 22 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. இதில் சென்னை அணி 10 ஆட்டத்திலும், மும்பை அணி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. மேலும் இந்த போட்டியை முதன் முதலாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து