முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். முதல் லீக் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை பந்துவீச்சை சிதறடித்து வெற்றி பெற வைத்தார் சீனியர் வீரரான, பிராவோ.

பந்து வீச்சு தேர்வு
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. இரண்டாண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே களத்திற்கு திரும்பியுள்ளதால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு, சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும், ஷேன் வாட்சனும் நெருக்கடி கொடுத்தனர்.

மும்பை அதிரடி...
மும்பை தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ், ரன் எதுவும் எடுக்காமால் தீபக் சாஹரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் கேட்ச் ஆனார். பின் இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள்தான் எடுத்திருந்தது. பின்னர் அந்த அணி அதிரடி காட்டியது. சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.

165 ரன்கள்...
இறுதிக்கட்டத்தில் பாண்ட்யா சகோதரர்கள், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். குணால் பாண்டயா 22 பந்தில், 41 ரன்களும் ஹர்திக் 20 பந்துகளில் 22 ரன்களும் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய ஹர்திக் பாண்ட்யா, சென்னையின் பிராவோவுடன் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றனர். சென்னை தரப்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆரம்பமே அதிர்ச்சி...
பின்னர் களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் முதலில் தடுமாறி, அதிரடியில் இறங்கிய போது ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். அவர் 16 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 22 ரன்களில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா (4), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) என யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த கேதர் ஜாதவ், காயம் காரணமாக வெளியேற, சென்னை அணி தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியானது.

பிராவோ அபாரம்...
இந்நிலையில் களமிறங்கிய பிராவோ, ’ஒத்தையாக’ போராடினார். 18 -ஓவரை மேக்லஹென் வீச, அந்த ஓவரில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தார். அதுவரை டிரெஸ்சிங் ரூமுக்குள் உட்கார்ந்து சோகமாக பார்த்துக்கொண்டிருந்த சென்னை அணியினருக்கு பிராவோவின் அதிரடி நம்பிக்கை அளித்தது. பிறகுதான் சிரிக்கவே ஆரம்பித்தார் டோனி.

68 ரன்கள் குவித்தார்
அடுத்து 19-வது ஒவரை பும்ரா வீசினார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான இவரது பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பதற்றத்தைத் தணித்த பிராவோ, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட் ஆனார். அவர் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரியும் 7 சிக்சர் அடங்கும்.

பவுண்டரி அடித்து...
பின்னர் காயம் காரணமாக பாதியில் வெளியே சென்ற கேதர் ஜாதவ் வந்தார். பங்களாதேஷின் முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். முதல் மூன்று பந்துகளை விட்டுவிட்ட கேதர், டென்ஷனை அதிகரித்தார். ஆனால் அடுத்த பந்தில் சிக்சர் பறக்கவிட்டதும் திரில் அதிகரித்தது. வெற்றிக்கு 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார் காயத்துடன் ஆடிய ஜாதவ்.

ஹர்திக் பாண்ட்யா...
சென்னை அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் மார்கண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது பிராவோவுக்கு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து