முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே மாதம் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி கடந்த மாதம் 29-ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை தயாரித்து மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்பதா? என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு...

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல்திட்டம்’ (ஸ்கீம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்” என உத்தர விட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்  அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

மனுத்தாக்கல்...

சுப்ரீம் கோர்ட்  விதித்த கெடு முடியும் கடைசி நாளில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியது. மேலும் மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்டில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்டின் தீர்ப்பு குறித்து, குறிப்பாக செயல் திட்டம் (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு கர்நாடகாவும், தமிழகமும் இரு வேறுபட்ட விளக்கங்களை அளிக்கின்றன.

எனவே சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும், இதற்காக கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பை மத்திய அரசு உரியமுறையில் அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மனு மீது விசாரணை...

இந்த வழக்கு ஏப்ரல்- 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என சுப்ரீம் கோர்ட்  தெரிவித்தது. அதன்படி, இந்த மனு சுப்ரீம் கோர்டில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுபோலவே, ‘ஸ்கீம்’ குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பிற மனுக்களும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிபதிகள் கேள்வி ?

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்தது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

‘‘சுப்ரீம் கோர்ட்  அளித்த உத்தரவை நீங்கள் நடைமுறைப் படுத்தவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை. நாங்கள் உத்தரவு பிறப்பித்தபின் அதனை நீங்கள் கட்டாயமாக செயல்படுத்துவதில் உங்களுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே. பிறகு எதனால் தாமதம் ஏற்படுகிறது.

நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கினோம்.

வரைவு அறிக்கை தாக்கல்...

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும். கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதனை அடுத்து உரிய காலத்திற்குள் வரைவு செயல் திட்டத்தை சமர்பிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து