முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்றம் தேர்தலுடன் சேர்த்து தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய சட்ட ஆணையம் விரைவில் மத்திய அரசிடம் அளிக்க உள்ளது.

பா.ஜ.க. ஆதரவு

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் செலவினங்களை குறைக்கவும், அடிக்கடி தேர்தல் நடப்பதால் அரசு எந்திரங்கள் வளர்ச்சித் திட்டப்பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போவதை தடுக்கவும் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் கமி‌ஷனும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்துள்ளது.

19 மாநிலங்கள்

ஏற்கனவே தேர்தல் கமி‌ஷன் தனது பரிந்துரைகளை அரசிடம் தெரிவித்துள்ள நிலையில் மத்திய சட்ட ஆணையத்திடம் மத்தியஅரசு கருத்துகேட்டது. இதையடுத்து சட்ட ஆணையம் பரிந்துரைகளை தயாரித்துள்ளது. அதில் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழகம், டெல்லி, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பிகார், சத்தீஷ்கர், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா, ஆகிய 19 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

மீதம் உள்ள 12 மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரையில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆணையம் விரைவில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்க உள்ளது. சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந்தேதி (செவ்வாய் கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசு பிரதிநிதிகள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் திட்டம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிகாலம் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் தான் முடிவடைகிறது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தமிழக சட்டசபைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடத்தும் நிலை ஏற்படும். அடுத்த ஆண்டே தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.

தேர்தல் நடத்த தயார்

இதற்கிடையே பாராளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும். போதைய வாக்குப்பதிவு எந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் எங்கள் பதிலை தெரிவித்துள்ளோம். எங்கள் கோரிக்கையை பூர்த்தி செய்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பல்வேறு நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது என்றாலும் அரசியல் கட்சிகளிடம் இது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து