ஐ.பி.எல். 5-வது லீக் போட்டி: கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      விளையாட்டு
chennai super kings win 2018 4 11

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பலத்த பாதுகாப்பு...

ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டம் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் இருஅணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பந்து வீச்சு தேர்வு

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். நரேன் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய உத்தப்பா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். லின் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உத்தப்பா 29 ரன்னில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது.

ரசல் அதிரடி...

அதன்பின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன் குவித்தனர். ரசல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரசல் 36 பந்தில் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். சென்னை அணியின் வாட்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

ஆரம்பமே அதிரடி...

இதையடுத்து, சென்னை அணி 203 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இறங்கினர். முதலில் இருந்தே இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

ரெய்னா 14 ரன்கள்...

ஷேன் வாட்சன் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின்  எண்ணிக்கை 73 ஆக இருந்தது. அவரை தொடர்ந்து அம்பதி ராயுடுவும் 39 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 14 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

பில்லிங்ஸ் அதிரடி...

அடுத்து களமிறங்கிய டோனியும், சாம் பில்லிங்சும் நிதானமாக ஒன்று, இரண்டாக சேர்த்தனர். இதனால் அந்த அணி 15 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. முக்கியமான தருணத்தில் டோனி 25 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. 21 பந்துகளில் 53 ரன் தேவைப்பட்டது. அவரையடுத்து ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அதிரடியாக ஆடிய பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 23 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து அதிரடி வீரர் பிராவோ களமிறங்கினார்.

சென்னை வெற்றி...

இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோவும், ஜடேஜாவும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் டாம் கர்ரன் 2 விக்கெட்டும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து