அரசு வழங்கிய பாதுகாப்பை திரும்ப ஒப்படைத்த லல்லு குடும்பத்தினர்

பாட்னா, பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியும் அவரது இரு மகன்களும் தங்களுக்கு மாநில அரசு வழங்கிய பாதுகாப்பை திரும்ப ஒப்படைத்தனர். தங்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட பாதுகாப்பையும் அவர்கள் நிராகரித்தனர்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கடந்த டிசம்பரில் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பீகார் அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள அவரது வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த 18 வீரர்கள் கொண்ட பாதுகாப்பை விலக்கிக் கொண்டது.
இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், இரண்டு முன்னாள் முதல்வர்களின் (லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி) வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முதல்வர் நிதிஷ் குமார் விலக்கிக் கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் என்ற முறையில் எனது தாய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கும், எம்.எல்.ஏ என்ற முறையில் எனது அண்ணன் தேஜ் பிரதாப்புக்கும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப ஒப்படைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், லல்லுவுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டனர். லல்லு தற்போது இல்லாததால் பாதுகாப்பை வாபஸ் பெற்றதில் தவறில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.