கார் விபத்தில் இறந்த தம்பதிக்கு பிறந்த குழந்தையை வளர்க்க தாத்தா, பாட்டிகளின் சட்ட போராட்டம்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      உலகம்
car accident 2018 04 13

பெய்ஙிங்: பெற்றோர் கார் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஷென் ஜீ, லியு ஜி. இருவருக்கும். கடந்த 2011-ம் ஆண்டு ஆண்டு திருமணமானது. இவர்கள் இருவரும் தங்களின் உயிரணுக்களை நங்ஜியான் நகரில் உள்ள டிரங்க் மருத்துவமனையில் பாதுகாக்க வைத்திருந்தனர். இருவரின் உயிரணுக்களும், லியுவின் கருமுட்டைகளும் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆண்டு ஷென் ஜீ, லியு ஜி ஆகிய இருவரும் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே லியு ஜி உயிரிழந்தார். மருத்துவமனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஷென் ஜீயும் மரணமடைந்தார்.


இதனால், ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் வயதான பெற்றோருக்கு அடுத்து ஆதரவில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளின் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் ஷென் ஜீ, லியு ஜி பெற்றோர் கோரினார்கள். ஆனால், அவர்களிடம் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து வயதான பெற்றோர் இருவரும் நீதிமன்றத்தை நாடினர். பலஆண்டுகளாக பலவிதமான சட்டப்போராட்டங்களை நடத்தினார்கள். தங்களின் பிள்ளைகளின் கருமுட்டைகள், உயிரணுக்களும் தங்களுக்கே சொந்தம் அதை எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதன் மூலம் எங்களின் வம்சத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறோம் என்று நீதிமன்றத்தில் வயதான பெற்றோர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உயிரணுக்களை, கருமுட்டைகளை வழங்க அனுமதியில்லை.

ஆனால், இந்த வழக்கை அரிதினும் அரிதாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் உயிரணுக்களையும், லியுவின் கருமுட்டைகளையும் வயதான பெற்றோர் வசம் ஒப்படைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

மருத்துவமனை நிர்வாகமோ தான் நேரடியாக கருமுட்டைகளையும், உயிரணுக்களையும் ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் பெற்றோர்களுக்கு தர இயலாது இந்த கருமுட்டைகளை எந்த மருத்துவமனையில் வளர்க்க விரும்புகிறார்களோ அந்த மருத்துவமனையின் பொறுப்பில்தான் தரமுடியும் என்று கூறிவிட்டது.

ஆனால், சீனாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் வாடகைத்தாய் மூலம் இந்த கருமுட்டைகளை வளர்க்க ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்களால் இயலவில்லை.

இதையடுத்து, உயிரிணுக்களையும், லியுவின் கருமுட்டைகளை, லாவோஸ் நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்கள் கொண்டு வந்தனர். அங்குள்ள ஒரு மருத்துமனையில் லியுவின் கருமுட்டைகள் வளர்க்கப்பட்டு, 27 வயதுடைய ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கப்பட்டது.

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின், 2017-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வாடகைத்தாய் மூலம் குவாங்ஜூ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏறக்குறைய ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனபின் கடந்த மாதம் அதற்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. அந்த குழந்தைக்கு ‘டையன்டியன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. டையன்டியன் என்றால் ‘இனிப்பு’ என்று அர்த்தம்.

இந்த டையன்டியன் பிறந்தது குறித்து மறைந்த லியுவின் தாயார் ஹூ ஜின்ஜியன் கூறுகையில், ''என் பேரனைப் பார்க்கும் போது எனது மகளைப் பார்க்கும் ஞாபகம் வருகிறது. என் மகளின் கண்களைப் போன்று கண்கள், முகம், நிறம் என அனைத்தும் என் மகள் லியு போன்று இருக்கிறது'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்.

இதற்கிடையே இந்த வயதான பெற்றோர்களுக்கு இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சீனாவின் விதிப்படி, இந்தக் குழந்தையின் டிஎன்ஏயும், தாத்தா பாட்டிகளின் டிஎன்ஏவும் தொடர்புடையதுதான் என்று நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே குழந்தையை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்பது அடுத்த கட்ட சோதனையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து