முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச மாணவர் போராட்டம் எதிரொலி: வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ரத்து பிரதமர் ஷேக் ஹசீனா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா: வங்கதேசத்தில் சிறப்புப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்வதாக பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

இதையடுத்து போராட்டத்தைக் கைவிட ஒப்புக் கொண்ட மாணவர்கள், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வங்கதேசத்தில், பாகிஸ்தானுடனான விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள், பெண்கள், சிறுபான்மை பூர்வகுடியினர் ஆகியோருக்கு அரசு வேலைவாப்பில் 56 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு முறைக்கு பல்வேறு மாணவர் குழுவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிறப்புப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள 56 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாகக் குறைப்பது, இட ஒதுக்கீட்டு சலுகையை ஒரு முறை அனுபவித்தவரின் பிள்ளைகள் அந்தச் சலுகையை மீண்டும் பெறுவதைத் தடுப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாள்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் போராட்டம், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைகளை முற்றுகையிட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதாக பிரதமர் ஹசீனா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிவித்தார்.

மேலும், சாலைகளை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்பியதாகவும் மாணவர்கள் மீது ஹசீனா குற்றம் சாட்டினார்.

இட ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது, மாணவர் போராட்டத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, போராட்டங்களைக் கைவிடுவதாக மாணவர்கள் வியாழக்கிழமை அறிவித்தனர்.
எனினும், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து