ஐ.பி.எல். 7-வது லீக் போட்டி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      விளையாட்டு
Hydrabad Win 2018 04 13

ஐதராபாத்: ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் பந்துவீச்சு...
ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர். 

மும்பை தடுமாற்றம்
ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லெவிஸ் 29 ரன்னும், சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.


148 ரன்கள் இலக்கு...
ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

தவான் அதிரடி...
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும், ஷகிப் அல் ஹசன் 12 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

ரகுமான் 2 விக்கெட்...
அடுத்து இறங்கிய தீபக் ஹூடாவும், யூசுப் பதானும் நிதானமாக ஆடினர். யூசுப் பதான் 14 ரன்னிலும். அடுத்த பந்தில் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ஒரு ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் முஸ்தபிசுர் ரகுமான். இதனால் இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

ஐதராபாத் வெற்றி...
முதல் பந்தில் ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து வைட் ஆக ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹூடா இறுதி வரை  அவுட்டாகாமல் 32 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து