முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவும் பதிலடி

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்கா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சிரியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

உள்நாட்டு போர்
சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது. உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

ரசாயன தாக்குதல்
கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன.  இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகம் எழுப்பப்பட்டது.

180 பேர் பலி...
ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது.  எனினும் பலி எண்ணிக்கை 180-ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

டிரம்ப் அறிவிப்பு
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார்.  இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ’சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது. புதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதல் தொடங்கியது

இதையடுத்து, சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்சு, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வழிமறித்து சுட்டு...
சிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், சிரியா மீது நேற்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஏவுகணைகள்
முன்னதாக, சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம் என சிரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது நேற்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒருபங்கு ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன என அரசுப் படைகளுக்கு ஆதரவான மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேட்டையாட...
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள ரஷ்யா, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்காவின் பகைநாடான ரஷியாவும், ஈரானும் வன்மையாக கண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் கிளர்ச்சியாளர்களை இன்னும் வெகு தீவிராக வேட்டையாட உதவும் என பஷர் அல் ஆசாத் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒவ்வொரு அங்குலம் பகுதியிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் போரில் சிரியா அரசும், மக்களும் மிக தீவிரமாக செயல்பட இந்த தாக்குதல் வகை செய்துள்ளது என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிரியா விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுபாடுடனும், போர் நடவடிக்கையை மேலும் விரிவாக்க கூடாது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து