குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      தமிழகம்
rain 2017 10 12

சென்னை: குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்
24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வட தமிழகத்தில்...
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்ததீவு, லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இடி மின்னலுடன்...
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் கன்னியாகுமரி, குலசேகரம், மார்த்தாண்டம், குளச்சல், பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், களியக்காவிளை என மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இரவில் இடி மின்னலுடன் பல இடங்களில் மழை கொட்டியது. அதிகபட்சமாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பேச்சிப்பாறை பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலையும் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான நிலை காணப்பட்டது. 

குற்றால அருவிகளில்...
மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே அணைக்கு வரும் நீரின் அளவு 225 கன அடியில் இருந்து 2,320 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.60 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் இருந்து, 225 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இன்னும் சீசன் காலம் தொடங்கவில்லை என்பதால் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் அவர்கள் கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து