வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.27 கோடியில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளை மாளிகை போல் கூடுதல் கட்டிடங்கள் முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன்று அடிக்கல்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      தமிழகம்
CM Edapadi1 2017 9 3

மதுரை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இன்று மதுரையில் ரூ.27.கோடி மதிப்பில் வெள்ளை மாளிகை தோற்றம்போல் அமையவிருக்கும் கூடுதல் கட்டிடங்களுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்த விழா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடக்கிறது.

உதயகுமார் தலைமையில்...
மதுரை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் ரூ.27 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இன்று நடைபெறும் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் கலந்து கொண்டு கட்டிடப் பணியை தொடங்கி வைக்கிறார்கள். இந்த விழாவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகிக்கிறார்.

வெள்ளை மாளிகை...
இதனையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளை மாளிகை தோற்றத்தைப் போல் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தையும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ)செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் முத்தக்குமார், மற்றும் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


549 புதிய கட்டிடங்கள்
இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அம்மா வாரி வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் உள்ளன. குறிப்பாக வருவாய்த்துறையின் சார்பில் மாவட்ட அலுவலகம் தொடங்கி கிராம நிர்வாகம் வரை பல்வேறு கட்டிடங்களை உருவாக்கி மக்களுக்கு எளிதாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அம்மா அவர்களின் 2011 காலம் தொடங்கி இன்று வரை வருவாய்த்துறையின் சார்பில் ரூ.540 கோடி மதிப்பில் 549 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் தஞ்சை , கன்னியாகுமரி, ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதிய ஆட்சித்தலைவர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளன

110 விதியின் கீழ்...
தற்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.26.62 கோடி மதிப்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம், மாவட்ட கலால் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தன. இந்த கட்டிடங்கள் எல்லாம் சொந்த கட்டிடமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பெயரில் கூடுதல் கட்டிடங்களாக செயல்பட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்...
இதனையொட்டி வருவாய்த்துறையின் சார்பில் கடந்த 30-10-2017 அன்று இதற்குரிய அரசாணை எண்,346 என்று வெளியிட்டு இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதனையொட்டி டெண்டர்கள் கோரப்பட்டு ரூ.20 கோடி மதிப்பில் முதல் கட்டமாக டெண்டர் பணி நிறைவடைந்துள்ளது தற்போது இதற்கான பூமிபூஜை வருகின்ற 15-04-2018 அன்று ஞாயிறு காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும், தாயுள்ளத்தோடு நாங்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த பூமிபூஜை நிகழ்ச்சியை நேரில் வந்து துவக்கி வைக்கின்றனர்.

18 மாதங்களுக்குள்...
இந்த கூடுதல் கட்டிடமானது ஒரு வெள்ளை மாளிகை போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1,17,000 சதுர அடிகள் கொண்டு நான்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 2வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கும், புதிதாக கட்டப்படும் இடத்திற்கும் தொடர்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது இப்பணி 18 மாதங்களுக்குள்ளேயே முடிக்கப்படும். இந்த பணிகளின் மூலம் அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பெருந்திட்ட வளாக கூடுதல் கட்டிடத்தில் இருக்கும்.

அடிக்கல் நாட்டுகிறார்...
இந்த கூடுதல் அலுவலக கட்டிடங்களுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டுகிறார்கள். விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை(இன்று) காலை மதுரை வருகிறார்கள். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து