முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

66 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் இந்தியா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோல்ட் கோஸ்ட்: 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன்  நிறைவடைந்தது. போட்டிகளின் நிறைவு விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த போட்டிகளில் 66 பதக்கங்களை பெற்று இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கணைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். கடந்த 11 நாட்களாக நடந்த இந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.

ஒரே நாளில் 7 தங்கம்
நேற்று முன்தினம் நடைபெற்ற 10-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்களை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது. கடைசி நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் 1 தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்றனர். பாட்மிண்டன் பிரிவில் சாய்னா தங்கமும், பி.வி.சிந்து வெள்ளியும், கிடம்பி சிறீகாந்த் வெள்ளி பதக்கமும் வென்றனர். இந்தியாவுக்கான 26-வது தங்கத்தை சாய்னா நேவால் பெற்றார்.

66 பதக்கங்கள்
21-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது. பதக்க பட்டியலில் 80 தங்கப்பதக்கம், 58 வெள்ளி, 59 வெண்கலம் உள்ளிட்ட 197 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் உள்ளிட்ட 137 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்ததால் அதன் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிறைவு விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி. மேரிகோம் இந்திய தேசியக் கொடியை  ஏந்திச் சென்றார். காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக இந்த ஆண்டு மேரி கோம் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 66 பதக்கங்களை பெற்று இந்தியாவை 3 -வது இடத்துக்கு முன்னேறி பெருமைப் படுத்தினர். போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் வெற்றி, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தி உள்ளனர். பல தடைகளை கடந்து அர்ப்பணிப்புடன் விளையாடி உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். காமன்வெல்த் போட்டியில் பெற்ற வெற்றிகள் விளையாட்டில் ஈடுபட மேலும் இளைஞர்களை ஊக்குவிப்பதுடன், ஒவ்வொருவரின் வாழ்க்கையில், உடல் தகுதி முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகளில் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பெற்று தந்த வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் காமன்வெல்த்தில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அற்புதமான செயல்திறன் மூலம் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளதுடன் லட்சகணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக உள்ள உண்மையான வீரர்கள் என்று கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து