முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சிரியாவில் ஏவுகணை தாக்குதல் ஐ.நா. சபையில் அமெரிக்க தூதர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஐ.நாடுகள் சபை, சிரியாவில் இனிமேலும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதி டவுமா நகரில் கடந்த 7-ம் தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து சிரியா மீது நேற்றுமுன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
 
ரஷ்ய தீர்மானம் தோல்வி

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் சிரியா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.

ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா மட்டுமே ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 4 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி யடைந்தது.

இந்த கூட்டத்தில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியபோது, “சிரியாவில் இனிமேலும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் வாசிலி நிபென்ஜியா கூறியபோது, “அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. உலகம் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.

சிரியாவில் ஆய்வு

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ரசாயன ஆயுத தடைக்கான அமைப்பின் (ஓ.பி.சி.டபிள்யூ) நிபுணர்கள் தற்போது அந்த நாட்டில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் டவுமா நகரில் நேற்று தங்கள் ஆய்வை தொடங்கினர். விரைவில் அவர்கள் தங்கள் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சிரியா அமைச்சர் அயுமான் சூசன் கூறியபோது, “ஓ.பி.சி.டபிள்யூ நிபுணர்கள் சுதந்திரமாக பணியாற்ற அதிபர் ஆசாத் அரசு உதவும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து