முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை-பெங்களூரு அதிவேக ரயில் வழித்தடம்: சீனாவின் உதவியுடன் நிறைவேற்ற இந்தியா திட்டம்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் வழித்தட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சீனாவின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது.

இந்தியா-சீனா இடையேயான பொருளாதாரப் பேச்சுவார்த்தைக் கூட்டம், பெய்ஜிங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினரும், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஹி லிஃபாங் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை ராஜீவ் குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

சென்னை- பெங்களூரு இடையேயான மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்குமாறு சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு முன்பு, ஆக்ரா, ஜான்சி ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடம் கலந்தாலோசித்துவிட்டு பதிலளிப்பதாக சீன அதிகாரிகள் கூறினர்.
எனினும், அதிவேக புல்லட் ரயில் திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. உலகிலேயே மிகவும் நீளமான அதிவேக ரயில்களை இயக்குவதற்கான வழித்தடம் சீனாவில்தான் உள்ளது. சீனாவில், பல முக்கிய நகரங்களை இணைத்து 22,000 கி.மீ. தொலைவுக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோன்ற ரயில்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும், சென்னை, தில்லி ஆகிய நகரங்களில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கு சாத்தியப்பாடுகளை சீனா ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.

சீனா, அமெரிக்கா இடையே தற்போது நிகழும் வர்த்தகப் போரில், இந்தியா யாருக்கு ஆதரவு அளிக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

வர்த்தக விஷயங்களில் இந்தியா எப்போதும் தனிப்பட்ட நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. சர்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் நடைபெற வேண்டும்.
ஆனால், சீனாவும், அமெரிக்காவும் இறக்குமதி செய்வதற்கு பரஸ்பரம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சர்வதேச சட்ட விதிகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்தவித கட்டுப்பாட்டையும் இந்தியா விரும்பவில்லை. எனவே, இந்த விவகாரத்தில், இந்தியா யாருக்கும் ஆதரவு அளிக்காது.

சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் சிறிய அளவிலேயே உள்ளது என்று ராஜீவ் குமார் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து