செவ்வாய், வெள்ளி கிரகங்களில் ஆராய்ச்சி: இந்தியா-பிரான்ஸ் இணைந்து ஆலோசனை

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      உலகம்
Mars and Silver Planets Research 2018 04 16

பாரீஸ், செவ்வாய், வெள்ளி கிரகங்கள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்து இந்தியாவும், பிரான்சும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இருநாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரு தரப்பு விண்வெளி ஆய்வில் இணைந்து செயல்படுவது குறித்து ஒரு மாதத்துக்கு முன்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமும் (இஸ்ரோ), பிரான்ஸ் தேசிய விண்வெளி ஆய்வு மையமும் (சிஎன்இஎஸ்) இணைந்து நிலவு, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் ஆய்வு நடத்தும் இயந்திரங்களை உருவாக்குவது குறித்து முதல்கட்டமாக ஆலோசனை நடத்தியுள்ளன.

இது தொடர்பாக சிஎன்இஎஸ் அதிகாரிகள் கூறுகையில், "செவ்வாயுடன் ஒப்பிடும் போது வெள்ளி கிரகம் குறித்து அதிக ஆய்வுகள் நடைபெறாமலேயே உள்ளன. எனவே, வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதில்


கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். இதற்கு இஸ்ரோவும் இசைவு தெரிவித்துள்ளது.

இது தவிர இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்விலும் இணைந்து செயல்பட ஆலோசித்துள்ளோம். ஏற்கெனவே இந்தியா சார்பில் நிலவை ஆய்வு செய்ய சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் ஆகிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் சந்திரயான்-2 திட்டத்தையும் இந்தியா செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேற்று கிரகங்களில் இறங்கி உலவும் இயந்திரத்துக்குத் தேவையான வழிகாட்டும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு பிரான்ஸ் அளிக்கும்.

செவ்வாய், வெள்ளி கிரகங்களில் இருந்து பெறப்படும் அங்குள்ள தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இரு நாடுகளும் இணைந்து ஆய்வு செய்யும். இந்தத் திட்டத்தில் மட்டுமல்லாது, இஸ்ரோ எதிர்காலத்தில் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கும் பிரான்ஸ் உதவியாக இருக்கும்' என்று தெரிவித்தனர்.

செவ்வாய் கிரகத்தைப் போலவே வெள்ளி கிரகமும் பூமிக்கு அருகில் உள்ள கிரகம்தான். கடந்த 1962-ஆம் ஆண்டு அமெரிக்கா முதல்முறையாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் சுமார் 24 முறை வெள்ளி கிரகம் தொடர்பான ஆய்வுக்காக விண்கலங்களை அனுப்பியுள்ளன.

அளவு, உள்ளடக்கம், ஈர்ப்பு விசை ஆகியவற்றில் வெள்ளி கிரகம் நமது பூமியை ஒத்துள்ளது. எனினும், அதன் தரைப்பகுதி முழுமையாக மேகங்களால் மூடப்பட்டுள்ளன., பூமிக்கும், வெள்ளிக்கும் உள்ள பல வேறுபாடுகள் எளிதில் புரிந்துள்ள கொள்ளத்தக்கதாக இல்லை. வெள்ளி கிரகத்தில் உள்ள பல விஷயங்கள் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து