முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: காங். வேட்பாளர் முதற்கட்ட பட்டியல் வெளியீடு: சித்தராமையா போட்டி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்டப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வரா கொரட்டேகிரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு குடும்பத்துக்கு ஒரு தேர்தல் டிக்கெட் வாய்ப்பு என்ற விதிமுறையை காங்கிரஸ் கட்சி வகுத்தது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இந்த விதிமுறையை கடைப்பிடிக்காமல் தளர்த்திவிட்டது.

முதல்வர் சித்தராமையா, அவரின் மகன், மாநில உள்துறை அமைச்சர், அவரின் மகள், சட்டத்துறை அமைச்சர் அவரின் மகன் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 12-ம் தேதி தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் மைசூரு மண்டலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா போட்டியிடுகிறார். வடக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள பாதமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கு முன் மைசூரு மண்டலத்தில் உள்ள வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா இந்த முறை அந்தத் தொகுதியை மகன் யதிந்திராவுக்கு ஒதுக்கியுள்ளார். இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்முறையாக சித்தராமையா போட்டியிட்டார். இந்த தொகுதியில் 5 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் அடைந்துள்ளார் சித்தராமையா.

தற்போது சித்தராமையா ஆட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களில் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் கட்டப் பட்டியலில், 15 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள், 2 பேர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்.

உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிடிஎம் லேஅவுட் தொகுதியிலும், அவரின் மகள் ஆர்.சவுமியா ஜெயநாகரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவின் மகன் சந்தோஷ் ஜெயச்சந்திரா தும்கூர் மண்டலத்தில் உள்ள சிக்கனயனஹல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்கட்ட 218 வேட்பாளர்கள் பட்டியலில் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 52 பேருக்கும், லிங்காயத் பிரிவைச் சேர்ந்த 48 பேருக்கும், ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்த 39 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்சி பிரிவைச் சேர்ந்த 36 பேருக்கும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 17 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 15 பேருக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், ஜெயின், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிடுகின்றனர்.இதில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் 24 பேரும், 41 முதல் 50வயதுடை வேட்பாளர்கள் 49 பேரும், 51 முதல் 60 வயதுடைய வேட்பாளர்கள் 72 பேரும், 70 வயதுக்கு மேல் 7 வேட்பாளர்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து