மாணவிகளுக்கு தவறான வழிகாட்ட முயன்றதாக புகார்: கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
nirmala devi 2018 04 16

சென்னை,  மாணவிகளுக்கு தவறான வழிகாட்ட முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்தவிவகாரத்தில், உயர் மட்ட விசாரணைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி பேராசிரியை...

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.


பணியிடை நீக்கம்

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

அமைச்சர் உறுதி...

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக கவர்னருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணைக்குழு

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்  நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரணை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.

சுனில்பாலிவால்...

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் அதிர்ச்சியானது; முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது; விருதுநகர் எஸ்.பி.யிடம் உயர்கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்படும் என  உயர்கல்வித் துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறினார். இந்த நிலையில் அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபாலிடம் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கல்லூரி நிர்வாகமும், மாதர் சங்கமும் கொடுத்துள்ளது. புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தனபால் கூறினார்.

நிர்மலா தேவி கைது

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்த அருப்புக்கோட்டை கவிதா நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸாரும் வட்டாட்சியிர் சிவ கார்த்தியாயினியும் சென்றனர்.
அவரது வீடு உள்பக்கமாக பூட்டியுள்ளது. கதவை திறக்க நிர்மலா தேவி மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸார் அங்கு 2 மணிநேரமாக காத்திருந்தனர். எனினும் அவர் வெளியே வரவில்லை. நிர்மலா வெளியே செல்லவில்லை என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து அவரது உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 7 மணி நேரமாக வீட்டை பூட்டி கொண்டு வெளியே மறுத்த நிலையில் அவருடன் செல்போனில் கணவர் சரவண பாண்டியும், சகோதரர் மாரியப்பனும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் கேட்காததால் கணவர், சகோதரர் முன்னிலையில் கதவை உடைத்து நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னர் உத்தரவு

தமிழக கவர்னர் பன்வாலிலால் புரோகித் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 16 ந் தேதி பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அருப்புக்கோட்டையில் இயங்கும் ஒரு கல்லூரியில் நடைபெற்ற ஒழுக்கக்கேடான நிகழ்ச்சி குறித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அறிக்கை அளித்துள்ளது. இந்த முக்கியமான விவகாரத்தில் உடனடியாக விசாரணை செய்துவுடன் குற்றவாளிகள் யாரும் நீதியின் முன் தண்டணையில் இருந்து தப்ப முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் அளிக்கையின் அடிப்படையிலும், தமிழக கவர்னரும் , பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் உயர்ந்த அதிகாரத்துடன் ஒய்வு பெற்ற ஐ-.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு நிலைகளிலும், தலைமைச் செயலாளர் நிலையிலும் இருந்துள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்வாகத்துறையிலும் உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார் என அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து