திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
dglfire2  17

திண்டுக்கல்,- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஞிலமலைக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மனைவி ஜெயந்தி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றார். அவரை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். 6 வருடங்களுக்கு முன்பு வாங்கிய கடனுக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. இதனால் அவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டி வருகிறார். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்  என்று தெரிவித்தார். இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர்  அலுவலகத்தில் அளித்துச் சென்றார்.
இதேபோல் திண்டுக்கல் அருகிலுள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மனைவி செல்வி(35). இவர் தனது மகள் மஞ்சுளாதேவி, மகன் மதன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தனது குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தன் உடலின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து செல்வி கூறுகையில், தான் வசித்து வரும் வீட்டை தனது தந்தை அபகரிக்க முயல்வதாகவும், அந்த வீட்டில் இருந்து தன்னையும், குழந்தைகளையும் விரட்டி விட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து