முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ வாயுத் தாக்குதல் தொடர்பான சர்வதேச ஆய்வுக் குழு டூமா நகருக்குள் அனுமதி மறுப்பு - பிரிட்டன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டூமா : சிரியாவின் டூமா நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசுப் படைகள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்புக்கு சிரியாவும், ரஷியாவும் அனுமதி மறுப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் பிரிட்டன் தூதகரம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியது.

விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, நிபுணர் குழு சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு  சென்றது. எனினும், தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் டூமா நகருக்குள் நுழைய அந்த குழுவினருக்கு சிரியாவும், ரஷியாவும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

விஷ வாயுத் தாக்குதல் குறித்து முழு உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த அமைப்பின் குழுவினர் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழுவைச் சேர்ந்த பிரிட்டன் பிரதிநிதிகள் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அப்போது முதல் இப்பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, ஐ.நா. மற்றும் ரஷியாவின் அமைதி முயற்சியில், கிழக்கு கெளட்டா பகுதியிலிருந்து கிளர்ச்சிப் படையினர் படிப்படியாக வெளியேறினர்.

எனினும், அந்தப் பகுதியின் முக்கிய நகரமான டூமாவிலிருந்து மட்டும் சில கிளர்ச்சிக் குழுக்கள் வெளியேற மறுத்தன. இதையடுத்து, பல நாள் அமைதிக்குப் பிறகு அந்தப் பகுதியில் சிரியா படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தினர். இந்தச் சூழலில், டூமா நகரில் சிரியா படையினர் கடந்த 7-ஆம் தேதி விஷ வாயுத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை ரஷ்யாவும், சிரியாவும் திட்டவட்டமாக மறுத்து வந்தாலும், அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா ராணுவ நிலைகள் மீது அமெரிக்க-பிரிட்டன்-பிரான்ஸ் கூட்டுப் படை கடந்த சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.

விஷ வாயுத் தாக்குதல் நடத்தியது உண்மைதானா? என்பதைக் கண்டறிவதற்காக  நிபுணர் குழு சிரியா வருவதற்கு முன்னரே அவசர அவசரமாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறித்து ரஷ்யாவும், சிரியாவும் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில், அந்தக் குழுவினருக்கு டூமா நகருக்குள் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து