முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை பேராசிரியர் விவகாரம்: கல்லூரி நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை தொடங்கியது.

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்: அருப்புக்கோட்டை பேராசிரியர் விவகாரம் தொடர்பாக தேவாங்கர் கல்லூரியில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மாணவிகளிடம் பேசியதாக கூறப்படும் செல்போன் ஆடியோ சமுக வலைதளங்களில் பரவி நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பி வருகிறது.

போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முத்துசங்கரலிங்கம் நியமனம்
இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டார்.

பேராசிரியை மற்றும் மாணவிகள் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதால், தென் மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரியும். துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கமும் விசாரணை நடத்த நேற்று விருதுநகர் வந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்ற பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் ஆகியோரை சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்த வாக்குமூலம், அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் வழக்கிற்கு முக்கிய ஆதாரமான செல்போன் பேச்சு பதிவு ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.
ஆவணங்களை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அருப்புக்கோட்டை சென்றனர். அங்குள்ள பிரச்சினைக்குரிய கல்லூரி, பேராசிரியை நிர்மலா தேவி வீடு போன்றவற்றை பார்வையிட்ட பின்னர் மதுரை வந்தனர்.

கல்லூரியில் விசாரணை
நேற்று காலை மீண்டும் அருப்புக்கோட்டை சென்ற அவர்கள் தேவாங்கர் கல்லூரி செயலாளர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

பேராசிரியை நிர்மலா தேவி அதே கல்லூரியில் படித்து அங்கேயே வேலை பார்ப்பதால் அவருடன் நெருக்கமாக இருந்தது யார்? வேறு யாருக்காவது இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

சைபர் கிரைம் போலீசார்  உதவி
இதற்கிடையே பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பதிவுகளை ஆராய சைபர் கிரைம் போலீசாரின் உதவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடியுள்ளனர்.

பேராசிரியை தற்போது தான் முதன் முதலில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது ஏற்கனவே இது போல வேறு மாணவிகள் யாரையும் அழைத்தாரா? என்பன போன்ற தகவல்களை அவரது செல்போனில் இருந்து அறிய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பேராசிரியை மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை போல மேலும் சில பேராசிரியர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேராசிரியை நிர்மலா தேவியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளனர்.

மாணவிகளிடம் பேராசிரியை பேசிய ஆடியோவில் உங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்.எனவே இதற்கு முன்பு பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் யாருக்காவது வங்கி மூலம் பணப் பரிமாற்றம் செய்துள்ளாரா? என்பதை கண்டறிய இது அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.பேராசிரியை நிர்மலா தேவிக்கு கவர்னர் மட்டத்தில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளதால் உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பல்கலையிலும் விசாரணை நடத்த முடிவு
அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அருப்புக்கோட்டை கல்லூரியில் விசாரணையை முடித்து விட்டு காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் சென்று விசாரணை நடத்த உள்ளனர். பேராசிரியையுடன் தொடர்பு வைத்தவர்கள் யார்? அவர்களது தூண்டுதலின் பேரில் தான் அவர் இப்படி செயல்பட்டாரா? என விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து சிறையில் இருக்கும் நிர்மலா தேவியை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து