முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயின் பறிப்பு திருடனை பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை அண்ணாநகரில் செயின் பறிப்பு திருடனை விரட்டிச் சென்று பிடித்த சிறுவனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதி அளித்துப் பாராட்டினார்.

சென்னை, அண்ணாநகர் சிந்தாமணியில் வசிக்கும் டாக்டர் ஆறுமுகம் (50). ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி பின்னர் விருப்ப ஓய்வு பெற்று மின்ட் பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா (48). இவர் மகப்பேறு மருத்துவர். அமுதா தாங்கள் குடியிருக்கும் சிந்தாமணி மூன்றாவது தெருவில் வீட்டின் கீழே கிளினிக் வைத்துள்ளார். கிளினிக்கில் தனியாக மருத்துவம் பார்ப்பார். உதவியாளர் யாரும் கிடையாது.

நோயாளி போல்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு இளைஞர் கிளினிக்கிற்கு வந்துள்ளார். டாக்டர் அமுதாவிடம் நோயாளி போல் நடித்த அவர், திடீரென டாக்டர் அமுதாவை மிரட்டி சற்றும் எதிரபாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா அவர் பின்னாலேயே திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார். அந்த நபர் வெளியே வேகமாக ஓடியுள்ளார்.

துரத்தி பிடித்த சிறுவன்
டாக்டர் அமுதா போட்ட கூச்சலை அவரது கிளினிக் எதிர்ப்புறம் கார் உதிரிபாகக் கடையில் பணியாற்றும் சூர்யா (17) என்ற சிறுவன் பார்த்து விரட்டிச் சென்று தீரமுடன் போராடிப் பிடித்தார். பொதுமக்கள் உதவாத நிலையிலும் தனியாக 17 வயது சிறுவன் போராடி சங்கிலி பறிப்பு நபரை விரட்டிப் பிடித்தது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

பாராட்டு
இதை செய்தித்தாளில் பார்த்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுவன் சூர்யாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து வரச் செய்தார். சிறுவனை தனது பக்கத்து சீட்டில் அமர வைத்து அவரைப் பாராட்டினார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காவல் ஆணையர் கூறியதாவது:
நேற்று முன் தினம் இரவு அண்ணா நகர் காவல் நிலைய எல்லையில் நோயாளி போல் வந்த நபர் டாக்டரிடம் 10 சவரன் செயினை பறித்து ஓடிய போது அந்த சம்பவத்தை பார்த்த தம்பி சூர்யா விடாமல் தன்னந்தனியாகவே துரத்திச் சென்று, திருடன்  தாக்க முயற்சி செய்த போதும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க முயற்சி செய்துள்ளார்.

வீரத்திற்கு வெகுமதி
வீரமான ஒரு செயலைச் செய்ய மற்றவர்கள் உடல் திறனுள்ளவர்களே யோசிக்கும் போது வீரமான எண்ணத்துடன் துரத்திச் சென்ற அவருக்கு நன்றி. வீரமான செயலுக்கு மக்கள் சேவை செய்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன். காவல்துறை சார்பில் அவரது வீரத்தைப் பாராட்டி சிறு வெகுமதி அளிக்கிறோம்  என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் பதிலளித்தார்.

மக்களின் உதவி
குற்றவாளிகளைப் பிடிக்க  பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? தங்கள் வேண்டுகோள் என்ன?  இந்த சம்பவத்தில் பார்த்தால் இந்த சிறுவனுக்கு நல்லவேலை எந்தத் தாக்குதலும் அவர்மீது நடக்கவில்லை. பொதுமக்கள் இதுபோன்ற விவகாரங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவ வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கும் அச்சம் வரும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தடுக்க முயலும்போது அவர்கள் போலீஸாரால் அலைக்கழிக்கப்படுவாரோ என்ற அச்சம் உள்ளதே?
பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில் அச்சமடைய வேண்டாம், அவர்கள் விருப்பப்பட்டால் ரகசியம் பாதுகாக்கப்படும். உதவி செய்தால் அவர்கள் விருப்பப்படி அவர்கள் எந்த வகையில் உதவுகிறார்களோ அப்படி கொண்டுசெல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். செல்போன் பறிப்புகள் சென்னையில் அதிகமாக உள்ளதே? அதைத் தடுக்க  கூடுதல் முயற்சி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காவல் ஆணையர் பதிலளித்தார்.

சிறுவனின் தீரத்தைப் பார்த்து அவருக்கு காவல் ஆணையர் வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன், சாரங்கன், இணை ஆணையர் அன்பு போன்றோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து