முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடைகால கொடுமையை சமாளிக்க குளிர்பானங்கள் பருகும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகால கொடிடுமையை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், பழச்சாறுகள் பருகும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் அறிவுரை  வழங்கி உள்ளார்.
    கோடைகாலத்தில் பொதுமக்கள் கடைகளில் பழச்சாறு, கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகும்போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட கடை உணவு பாதுகாப்பு துறையின் உரிமம்,  பதிவுச்சான்றிதழ் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். கடை இருக்கும் பகுதி சுகாதாரமாகவும்,  விற்பனையாளரும், பழச்சாறு தயாரிப்பவரும், தன்சுத்தம், கைசுத்தம் பேணுகிறாரா என்பதை கவனித்திட வேண்டும். அதேபோல குளிர்பானம் பழச்சாறு செய்யப் பயன்படும்  பழம், பால், தண்ணீர், போன்ற மூலப்பொருட்களும், குளிர்பானத்திற்கு பயன்படுத்தும் ஐஸ்கட்டிகள் மற்றும் சர்க்கரை ஆகியவை தரமானதாக உள்ளதா என உறுதி செய்திட வேண்டும்.  கூழ், மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும்.
 அதேவேளையில் தூசிபடாதவாறும், ஈ, பூச்சிகள் மொய்க்காதவாறும் மூடி வைத்திருக்கும் பழங்கள், பழச்சாறு, பழத்துண்டுகள், ப்ரூட் சாலட்களை மட்டுமே வாங்க வேண்டும். பழங்கள், சூரிய ஒளி, வெப்பம்படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுககூடியவை, ஆதலால் பழங்களை சூரிய ஒளி, வெப்பம்படாதவாறு குளிர்பெட்டி அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும். பேக்செய்யப்பட்ட தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கும் போது  காலாவதி தேதி, மற்றும் தயாரிப்பாளரின் முகவரி ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவும்.
 பழச்சாறு, புருட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும். சர்பத் குளி;ர்பானங்களில் நீலம், ஊதா ஆகிய அங்கிகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் வாங்குவதை தவிர்க்கவேண்டும். அதிகமான நிறங்கள் இரசாயன சுவைகூட்டி கலந்த சர்பத் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். ஐஸ்கட்டிகளை வைக்கோல், சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடிவைத்திருத்தல் கூடாது. குளிர்பானங்கள் பழச்சாறுகள் நேரடியாக குளிர்பெட்டியில் இருந்து பெறுவது நல்லது. இயன்ற அளவு ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் தவிர்ப்பது நல்லது.  குளிர்பானங்கள், பழச்சாறு நறுக்கிய பழங்கள் போன்றவற்றை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி செய்யப்ட்ட பிளாஸ்டிக் கப்புகளிலும் கவர்களிலும் வாங்குவதை தவிர்க்கவேண்டும்.
 மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக 9444042322 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உணவுப்பாதுகாப்பு குறித்து புகார்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து