முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் - முதல்வரின் கடிதத்தை நிதிக்குழு தலைவரிடம் கொடுத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் புதுடெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை நிதிக்குழு தலைவரிடம் நேரில் கொடுத்து  வலியுறுத்தினார். மேலும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக அரசுக்கு தேவையான நிதியை வழங்கக் கோரி மத்திய அரசை நேரில் வற்புறுத்தவே அவர் டெல்லி சென்றுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அங்கு இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து 15-வது நிதிக்குழு தலைவர் கே.என். சிங்கையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை கொடுத்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள் என்று வலியுறுத்தினார்.

வருவாய் இழப்பு...

தற்போது புதிதாக 15வது நிதிக் குழு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த பரிந்துரைபடி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்கள் இதனால் அதிக பலன் அடையும். ஆனால் அதிக வரி கட்டும் குறைந்த மக்கள் தொகை கொண்ட தென் மாநிலங்கள் வருவாய் இழப்பையும் சந்திக்கும். இது தென்மாநிலங்களுக்கு செய்யப்படும் பெரிய அநீதி என்று கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகியவை கண்டன குரல் எழுப்பி இருந்தது. இதுகுறித்து இவர்கள் ஒன்றாக கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நிதிக்குழுத் தலைவருடன்...

இந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த மத்திய நிதி குழு தலைவருடன் டெல்லியில் தமிழக துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் 15வது நிதிக் குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி நிதிக்குழுவால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கடிதத்தை அவரிடம் வழங்கினார்.

தேவையான நிதியை...

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு நிதிஒதுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் எடுத்தால் நிதிகுழுவால் ஒதுக்கப்படும் நிதியில் தமிழகத்திற்கு அதிகமான இழப்பு ஏற்படும் என்பதை சுட்டிகாட்டியுள்ளார். மேலும் தமிழகம் இயற்கை பேரிடர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

துணை முதல்வர் பேட்டி

அவரை சந்தித்துவிட்டு பின் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ''15வது நிதி குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு 40,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதை தெரிவித்தோம். தமிழகத்துக்குரிய நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினோம். இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடமும் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அப்போது அவர் தமிழ்நாட்டுக்கு கூடுமான வரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக கூறியதாகவும் துணை முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து