முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சட்ட திருத்தம் வருகிறது: 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநல வழக்கு
நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்ப்பட்டு வரும் நிலையில் இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், போஸ்கோ சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே தூக்குத் தண்டனை விதிக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆதலால், இன்று நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, விரைவில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

கூட்டுப்பலாத்காரம்
முன்னதாக, காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்துள்ளனர். அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 86 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமிகளுக்கு எதிரான இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு உச்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பா.ஜ.க எம்.பி. ஹேமமாலினியும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உண்ணாவிரதம் வாபஸ்
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலும், போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்து, அதில் தூக்கு தண்டனைப் பிரிவை சேர்க்க வலியுறுத்திக் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மத்தியஅரசு சார்பில் நேற்று உறுதிமொழிக் கடிதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

தூக்குத் தண்டனை...
இந்நிலையில், வழக்கறிஞர் அலாக் அலோக் சிறீவஸ்தவா தாக்கல் செய்த பொதுநலன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கத் திருத்தம் செய்யப்படும் என்ற உறுதிமொழிக் கடிதத்தை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் இதை அளித்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

வாழ்நாள் சிறை...
இதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தற்போதுள்ள போஸ்கோ சட்டப்படி, குழந்தையைப் பலாத்காரம் செய்பவருக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை மட்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். ஆனால், இந்த முறையில் திருத்தம் செய்யப்பட்டு பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டாலே தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இது குறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமிகள், குழந்தைகள் பலாத்காரத்தை தடுக்கக்கூடிய ஒரேவழி தூக்குத்தண்டனை விதிக்க அவசரச்சட்டம் பிறப்பிப்பதுதான். நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால், ஜூலை மாதம்வரை காத்திருக்க வேண்டும். ஆதலால், அவசரச்சட்டம் தான் வழியாகும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து