முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.131 கோடி நிவாரணத்தொகை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எண்ணூர் கடற்பகுதியில் கப்பல்கள் மோதலால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.131 கோடி நிவாரணத்தொகையை வழங்கும்  நிகழ்வாக சென்னையில் நேற்று 21 மீனவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.

இடைக்கால நிவாரணம்
எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் எம்.டி.பி.டபிள்யூ மேப்பிள் சரக்கு கப்பல் மற்றும் டான் காஞ்சிபுரம் என்ற எண்ணெய்க் கப்பல் ஆகிய இரண்டு கப்பல்கள் கடந்த 28.1.2017 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதால் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் அதனைச் சார்ந்த கடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள், மீனவ மகளிர், மீன் விற்பனை செய்பவர்கள், மீன்பிடி சார்ந்த பிற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6.3.2017 அன்று பாதிக்கப்பட்ட 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம், மொத்தம் 15 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகையை வழங்கினார்.

ரூ.141 கோடி நிவாரணம்...
மேலும், கப்பல் நிறுவனங்களிடமிருந்து உரிய நிவாரணத் தொகை பெற்றிட, பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களிடம் இருந்து மீன்வளத்துறை வாயிலாக நிவாரணக் கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு, ஒருங்கிணைந்த அறிக்கை அளிக்கப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 448 மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட 131 கோடி ரூபாயும், மறுசீரமைப்பு பணிகளுக்காக 10 கோடி ரூபாயும், என மொத்தம் 141 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது.

7 வகையாக...
கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் தொழில் சார்ந்த முறையில் 7 வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் நிவாரணத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 35,000 ரூபாயும், இயந்திர மயமாக்கப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 20,000 ரூபாயும், இயந்திரமயமாக்கப்படாத நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 15,000 ரூபாயும், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தலா 12,000 ரூபாயும், மீன்பிடி உபதொழிலில் ஈடுபடும் மீனவ மகளிருக்கு தலா 10,000 ரூபாயும், மீன் விற்பனை செய்பவர்களுக்கு தலா 10,000 ரூபாயும், மீன்பிடித்தல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

21 மீனவர்களுக்கு...
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் விதமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், மீன்வளத் துறை இயக்குனர் ஜி.எஸ். சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

யார் யாருக்கு எவ்வளவு?
1) விசைப்படகு உரிமையாளர்கள்  - தலா 35,000 ரூபாய்.
2) இயந்திர மயமாக்கப்பட்ட நாட்டுப்படகு - தலா ரூ.20,000.
3) இயந்திரமயமாக்கப்படாத நாட்டுப்படகு  - தலா ரூ. 15,000.
4) மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் - தலா ரூ.12,000.
5) மீன்பிடி உபதொழிலில் ஈடுபடும் மீனவ மகளிர் -  ரூ.10,000.
6) மீன் விற்பனை செய்பவர்கள் -  தலா 10,000 ரூபாய்.
7) மீன்பிடித்தல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் - தலா ரூ.10,000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து