முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் தேசிய குடிமை பணிகள் தின விழா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      சிவகங்கை
Image Unavailable

 விருதுநகர்.-  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குடிமை பணிகள் தின விழா மாவட்ட ஆட்சியர்  அ.சிவஞானம்  தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
 ஜனநாயக நாட்டின் அடித்தளமாகக் கூறப்படுவது நாடாளுமன்றம், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத் துறையாகும். இவ்வாறு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அரசு நிர்வாகத் துறையின் உயரதிகாரிகள் இந்திய சிவில் சர்வீஸஸ் எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது இந்தியக் குடிமைப் பணிகள் மூன்று முக்கியமான சேவைகளை அளிக்கும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை தேர்வு செய்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான இந்த அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
 அரசாங்கம் என்பது மக்கள் நலனுக்காவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் சமூக நீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது அரசாங்கமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் திட்டங்களையும் மற்றும் சட்டங்களையும் வகுக்கிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டங்களையும், திட்டங்களையும் மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பவர்கள் அரசு அலுவலர்கள். அப்படி உருவாக்கப்பட்ட திட்டங்களும் சட்டங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் முறையாக செயல்படு த்தப்படுகிறதா என்பதை நீதித்துறை கண்காணிக்கிறது. அரசு நிர்வாகம் என்பது தனிமனிதரால் நிர்வகிக்கப்படுவது அல்ல. மாறாக இது ஒரு குழுசெயல்பாடு.அரசு நிர்வாகத்தில் அதிகார பகிர்தலில் மட்டுமே வேறுபாடு உள்ளதே தவிர மக்களுக்கான சேவை ஆற்ற வரும்போது அனைத்து அலுவலர்களுககும் சமமான பங்கு உண்டு. எந்த ஒரு தனி மனிதராலும் நிர்வாகத்தை தனியாக நிர்வகிக்க இயலாது. ஒவ்வொரு அரசு அலுவலர்களும்  தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்றும்போது, எந்தவிதப் பிரச்னைகளையும் எளிதாக எதிர்கொண்டும், சிக்கல்களுக்கு தீர்வு கண்டும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க இயலும். இவ்வாறு பணியாற்றும்போது,  தங்களுடைய கொள்கையில் இருந்து பின்வாங்காமல் நேர்மையாகவும், உண்மையாகவும், நியமாகவும் நடந்து கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக மக்களுக்கான அரசு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி ஒரு வெளிப்படையான அரசு நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க இயலும். எந்த ஒரு அரசு பணியாளரும் அரசு பணியேற்ற பின்பு, அரசின் கட்டமைப்பை உணர்ந்து, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு அரசு பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்கள்.
   இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  .ஆனந்தகுமார், உட்பட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து