முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவத்துறையில் 1008 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மருத்துவ துறையில் 242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308  மருந்தாளுனர்கள் உட்பட 1008 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று டாக்டர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

மருத்துவதுறையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முன்னோடித் திட்டங்கள்...
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றார்கள் நம் முன்னோர்கள். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். எனவே, நோயில்லாத வாழ்வைப் பெறுபவனே மிகப்பெரிய செல்வந்தன் என்பதில் சந்தேகமில்லை. மனித குலத்தில் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். இன்றைக்கு தமிழ்நாடு மருத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா தீட்டிய முன்னோடித் திட்டங்கள் தான் என்பதை உலகு அறியும். அவரது ‘‘தொலைநோக்கு திட்டம் 2023"ல் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சுகாதார குறியீடுகளை தமிழ்நாடு அடையும் வண்ணம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவைகளை நிறைவேற்றிட அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

உயர்தர சிகிச்சை
உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு, தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நல சேவைத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதோடு, நோய்களைத் தடுப்பதற்காக பல முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவித்தல், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், லீனியர் ஆக்ஸிலேட்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத் ஆய்வகங்கள், சி.டி. ஸ்கேன் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை வழங்குதல், போன்ற அம்மாவுடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தியிருக்கின்றது.

சிறப்புத் திட்டங்கள்...
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்காக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்,விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், தொற்றாநோய் தடுப்பு, கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், தாய்ப்பால் வங்கி திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதி விரிவுபடுத்தல், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவுதல், ‘‘108" அவசரகால ஊர்தி சேவை போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அம்மாவினால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பான முறையிலே அம்மாவுடைய அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

23,880 பணியாளர்கள்
அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2012-ம் ஆண்டு அம்மாவினால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம், இதுவரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 23,880 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பணி நியமன ஆணை...
242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள் மற்றும் 90 நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் 21 வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர்கள், மற்றும் கருணை அடிப்படையில் 10 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான் இந்த அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ப்பணிப்பு உணர்வுடன்...
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில், இன்றைக்கு பணி ஆணை பெற்றுள்ள உதவி மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் நுண்கதிர் வீச்சாளர்கள் தங்களுடைய கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு போதிய மருத்துவ சேவைகளை வழங்குமாறும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சுகாதார திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் நலம் மேம்படவும், மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.திருக்குறளில் ‘மருந்து’ என்ற அதிகாரம் இருக்கிறது. மருத்துவத் துறைக்கு வருகிறவர்கள் அவசியம் அந்த அதிகாரத்திலுள்ள பத்து குறள்களையும் படித்து, அதன்படி நடப்பதுடன் அந்த கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜாராமன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து