முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகத்தை குறைத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வாகன ஓட்டுநர்கள் செயல்பட வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் 29வது சாலைபாதுகாப்பு வாரவிழா-2018, முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மு.ராசராசன்,  முன்னிலையில்   நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி  கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.
 மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி  பேசும் போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு அம்மா அவர்கள் விபத்தில்லா தமிழகத்தினை உறுவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். அதன் அடிப்படையில் விபத்துக்கலை தவிர்க்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு பேருந்தில் பயணிக்கிறோம் என்று சொன்னால் அதன் பாதுகாப்பு அம்சம் ஓட்டுநர் கையில் உள்ளது.  எனவே ஓட்டுநர் தன் பாதுகாப்பு மட்டும் இன்றி பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயனாளிகளை நம்பி அவர்களின் குடும்பம் இருக்கிறது. சாலைகளில் செல்பவர்கள் எந்த மனநிலையில் பயணிக்கிறார்கள் என்பதனையும் சிந்தித்து இவை அனைத்தையும் மனதில் கொண்டு  பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓட்டுநர்களுக்கு அரசு வருடந்தோறும் உடல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்வதோடு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இரவு நேர பயணங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநரின் கவனக்குறையால் முன்பு நான் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. நல்ல வேலையாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை. மேலும், சிலவருடங்களுக்கு முன்பு கள்ளிக்குடி அருகில் சாமி கும்பிட்டு விட்டு தன் மகளை பார்க்க சென்ற குடும்பம் கார் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த நான் உடனடியாக சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டேன். ஆனால் கம்பி லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்னால் கார் மோதியதால் கம்பி குத்தி ஒருவரும் கார் ஓட்டுநரும் இறந்து போனார்கள். அதன் பின் பயணம் செய்த அவர் மனைவியும் இறந்து போனார்கள். மற்றவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான் அவர்கள் குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து பார்த்து அவர்கள் அழுதது இன்றும் என் மனதில் தோன்றும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே இதுபோன்ற பல விபத்துக்களை நான் நேரில் பார்த்ததாலும், அதை உணர்ந்ததாலும் என் ஓட்டுநரிடமும் மற்றவர்களிடமும் கவனமாக செல்ல வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், முன் செல்லும் வாகனங்களின் செய்கையை மதிக்க வேண்டும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பேன். நீங்களும் இவைற்றை தவராமல் கடை பிடிக்க வேண்டும்.  பெண்கள், வயதானவர்கள் என பலர் வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களின் எண்ணங்களை உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும். விபத்தினை தவிர்ப்பதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்சியில் சொல்லப்படும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இங்கு வராதவர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும். மக்களிடையே போக்கு வரத்து விதிகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்  இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்துச் சோதனைகளில் ஈடுபடுவது அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகத்தான் எனவே நாம் சலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தடுக்க வேண்டும்,  வேகத்தை குறைத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் - என பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  செ.நடராசன் வரவேற்புரை ஆற்றினார்.  விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர்  மு.சந்திரசேகரன் நன்றி கூறினார். விருதுநகர் தனியார் மற்றும் மினி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தலைவர்  சண்முகய்யா, ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி முதல்வர் மரு.கே.அருள்மொழி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்  பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் வாகன உரிமையாளர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து