முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்குமா சென்னை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

புதன்கிழமை, 2 மே 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் சிங்கமாக வலம் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து களமிறங்குகிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

பட்டியலில் முதலிடம்

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் எதிரணிக்கு சிம்ம சொப்னமாக டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் 2 மட்டுமே தோற்று, 6 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ப்ளே-ஆப் சுற்றையும் ஏறக்குறைய தனக்கு பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. சூதாட்டப் புகாரில் சிக்கி பல்வேறு வீரர்கள் மாற்றத்துடன் சிஎஸ்கே எப்படி வரப்போகிறது எனக் கேட்டவர்களுக்கு, நெத்தியடியாக ஒவ்வொரு போட்டியிலும் டோனியின் படை பதில் அளித்து வருகிறது.

டோனி அபாரம்...

அணிக்கு இருமுறை கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் கூல் டோனி, இந்த சீசனிலும் கலக்கி வருகிறார். கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 51ரன்கள் சேர்த்து அனைத்து அணிகளுக்கும் கிலி ஏற்படுத்தினார் டோனி. இதுவரை 8 போட்டிகளில் 286 ரன்கள், சராசரியாக 71 ரன்களுடன் டோனி வலம் வருகிறார். அதிலும் கடந்த சில போட்டிகளில் டோனியின் பேட்டிங் ஃபார்ம் முன் பந்துவீச வீரர்கள் அலறுகின்றனர். எந்த பக்கம் பந்து வீசினாலும் டோனி தான் நினைத்த பக்கம் அனுப்புகிறார். இதனால், கடைசி நேரத்தில் டோனிக்கு பந்துவீசுபவர்கள் நிலை பரிதாபகரமே.
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியிடம் தோற்றுவிட்டாலும், அடுத்த சுற்றில் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இப்போது சிஎஸ்கே அணி இருக்கும் ஃபார்ம் முன் எந்த அணியும் முன்நிற்பது கடினமே.

இவருக்கு அடுத்தபடியாக அம்பதி ராயுடு அந்த அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாகும். எந்த வரிசையில் பேட்டி செய்ய இறங்கினாலும், நொறுக்கி அள்ளுகிறார். இதுவரை 370 ரன்கள் குவித்துள்ல ராயுடு, கடந்த 4 போட்டிகளில் 41, 46, 82, 79 ரன்கள் குவித்து எதிரணியை மிரட்டி வருகிறார்.

தொடக்க வீரராக களமிறங்கும் வாட்ஸன் அடிக்கத் தொடங்கிவிட்டாலே எதிரணிக்கு அடிவயிற்றை கலக்கத் தொடங்கிவிடும். கடந்த 8 போட்டிகளில் ஒருசதம் , இரு அரைசதம் அடித்துள்ளார் டெல்லிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 78 ரன்களை விளாசி வலிமையாக திகழ்கிறார்.

தற்போது புதிதாக களம் கண்டுள்ள தென்ஆப்பிரிக்க வீரர் டூப்ளிஸிஸ். இவர் எப்போது வெடிப்பார் என்று யாருக்குமே தெரியாது. இதுதவிர ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் என பேட்டிங்கில் எதிரணியை மிரட்டும் வகையில் படையே காத்திருக்கிறது.

பந்துவீச்சில் தாக்கூர் இடத்தை நிரப்பும் வகையில் லுங்கி நிகிடி, ஆசிப் வந்துள்ளனர். சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகிடி பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

இவரின் துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு டெல்லி அணியின் தோல்விக்கு முக்கியக் கராணமாகும். அதுபோல் ஆசிப்பும் முதல் போட்டியில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சபாஷ் பெற்றுள்ளார். இது தவிர ஆல்ரவுண்டர் பிராவோவின் பந்துவீச்சும், பேட்டிங்கும் எந்த நேரத்திலும் எதிரணிக்கு இடியாய் இறங்கும் அளவுக்கு வலிமையானது. இவர்களைச் சாமாளித்து கொல்கத்தா வெற்றி பெறுவது கடினமே.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் களத்தில் உள்ளது. கம்பீர் கேப்டனாக இருக்கும் வரை இருமுறை கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.

இப்போது தினேஷ்கார்த்திக் தலைமையில் அந்த அணி கோப்பையை வெல்ல தீவிரம் காட்டுகிறது. குறைந்தபட்சம் ப்ளே ஆப் சுற்றுக்காவது முன்னேற இந்தபோட்டியில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு கட்டாயமாகும்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரேன் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், நிலையாக நின்று பேட்டிங் செய்யும் திறனற்றவர்களாக இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். முதல் 6 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் ரன்ஸ்கோர் செய்தாலே ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையை எட்டலாம். ஆனால், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இருந்ததில்லை.

இது தவிர உத்தப்பா, ராணா, ஆன்ட்ரூ ரஸல், சுப்மான் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இதில் நிலைத்தன்மையுடன் பேட்டிங் செய்யக்கூடிய வீரரக்ள் என்று பார்த்தால் ஒருவரும் இல்லை. நெருக்கடியான நேரத்தில் அணியின் விக்கெட் சரிவையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பேட்டிங் இல்லை என்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்.
கடந்த 8 போட்டிகளில் கொல்கத்தா அணியின் சராசரி ரன் குவிப்பு என்பது, 150 ரன்களுக்குள்ளாகவே இருந்து வருகிறது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகிய இரு “ரிஸ்ட்” சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு பலமாகும்.

கடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பந்தில் வெற்றியை பறிகொடுத்தது கொல்கத்தா. இந்த முறை அந்த தவற்றைச் செய்யுமா, தோல்வியில் இருந்து பாடம் கற்று விளையாடுமா என்பது இன்று தெரியும். ஆனால், வரலாறு என்னமோ சிஎஸ்கேவுக்குத்தான் சாதமாக இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. அதில் 12 முறை சிஎஸ்கே அணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து