முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 32-வது லீக் போட்டி : ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி வெற்றி!

வியாழக்கிழமை, 3 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழை குறுக்கீடு

ஐ.பி.எல் தொடரின் 32-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்தது. இதனால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, பந்துவீச முடிவு செய்தார். அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா, காலின் முன்றோ களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 4-வது பந்தில் முன்றோ, குல்கர்னி பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஷா, 25 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரிஷாப் பன்ட் அதிரடி...

தொடர்ந்து ரிஷாப் பன்ட் வந்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் இவரும் அதிரடியாக விளாசினர். ஐயர், 35 பந்துகளில் 50 ரன்களும் ரிஷாப் 29 பந்துகளில் 69 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த விஜய் சங்கர் , 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 17.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. ராஜஸ்தான் தரப்பில் உனட்கட் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

151 ரன்கள் இலக்கு...

பின்னர், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, ஸ்கோர் மாற்றி அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் என நிர்ணயிக்கப் பட்டது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டியார்ஸி ஷார்ட், ஜோஸ் பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியின் அருகில் நெருங்கியது.

146 ரன்கள் மட்டுமே...

ஆனால் இந்த தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டை இழந்ததும் அடுத்து வந்தவர்கள் யாரும் அதிரடி காட்டவில்லை. அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி பரிதாபமாகத் தோற்றது. ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் டியார்ஸி ஷார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 44 ரன்களும் எடுத்தனர். ரிஷாப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டெல்லி அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து