முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைமழையால் கத்தரி வெயிலின் தாக்கத்தை மறந்த மக்கள்

வியாழக்கிழமை, 10 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், -திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைமழையால் கத்தரி வெயிலின் தாக்கத்தை மக்கள் மறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டியெடுத்து வந்தது. பல இடங்களில் குடி நீர் தட்டுப்பாடும் நிலவி வந்ததால் கத்தரி வெயில் மேலும் மக்களை வறுத்தெடுக்குமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் சித்ரா பவுர்ணமி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். ஒருசில நாட்கள் பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து நகரை குளிர்வித்து வருகிறது. இதனால் நிலத்தடி  நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் பெய்து வரும் மழையினால் கொடைக்கானல் மற்றும் பழனி நகரில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் நகரின் ஒரு சில பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. நகரின் பிரதான காந்தி மார்க்கெட் தொடர்மழையால் சகதிக்காடாக மாறியுள்ளது. தொடர்மழையினால் காய்கறிகள் வரத்து அதிகரித்து விலையும் குறைந்து வருவது பொதுமக்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தென் மாவட்டங்களில் மேலும் சில நாட்கள் மழை  நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அணைகள், குளங்கள் மற்றும்  நீர்நிலைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை கத்தரி வெயிலின் தாக்கத்தை அடியோடு மாற்றி விட்டது. மழையினால் அவ்வப்போது மின்தடை மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தாலும் கடும் வறட்சியில் சிக்கித் தவித்த மக்கள் இதனையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நேற்றுக் காலை வரை திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் வருமாறு
திண்டுக்கல் 16.30, கொடைக்கானல் 106, பழனி 9, ஒட்டன்சத்திரம் 16. நத்தம் 2.5, நிலக்கோட்டை 1.2, வேடசந்தூர் 2.2, கொடைக்கானல் போட்கிளப் 42.5 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் 197.90 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் கோடைமழையின் இயல்பை விட கூடுதலாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து