முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இணைப்பு தமிழக அரசு அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காக, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்தை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காக, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்தை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைப்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக தமிழக அரசு 7 பேர் கொண்ட குழுவை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமைத்தது.

நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், விழுப்புரம், மதுரை, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய 8 போக்குவரத்து கழகங்கள் பிரிக்கப்பட்டன. இக்கழகங்களால் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 26 கோடி வருவாய் கிடைக்கிறது.

ஆனால் டீசல் விலை உயர்வு, உதிரிப் பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட அதிகரிக்கும் செலவினங்களால் இத்துறை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக் கொடை, ஓய்வூதியம், விடுப்பு தொகை ஆகியன நிலுவையில் உள்ளன.

இதன் காரணமாக அரசுப் போக்குவரத்து கழகங்களின் செலவுகளைக் குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க அரசு போக்குவரத்து கழகங்களின் நிதிக்கழகம் பரிந்துரை செய்தது. அதன்படி, இந்த இரு கழகங்களையும் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு குழு அமைத்தது.

இக்குழுவில் போக்குவரத்துத் துறை துணைச் செயலர் எம்.மணிசிவனார், நிதித்துறை இணை இயக்குநர் சி.ஆர்.பாலாஜி உள்பட மொத்தம் 7 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு ஓரிரு மாதத்தில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், வல்லுநர் குழு பரிந்துரையை ஏற்று திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரையுடன் இணைத்து  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து