அணு ஆயுதக் கூடங்கள் இம்மாத இறுதியில் அழிப்பு: வடகொரியா முடிவு

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
KIM 2017 12 31

பியாங்கியாங் : வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மையங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் இதுநாள் வரை நீடித்து வந்த அணு ஆயுதப் போர் பதற்றம் முற்றிலுமாக நீங்கியுள்ளது.

ஆசியக் கண்டத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வடகொரியாவின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

வடகொரிய வெளியுறவு அமைச்சர் கங் கியுங்-வா இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு (கேசிஎன்ஏ) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வடகொரியாவில் அணு ஆயுத சோதனைக் கூடங்கள் மற்றும் அணு ஆயுத ஆய்வு மையங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும். இதுவரை அணு ஆயுதச் சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும். இதற்கான தொழில்நுட்பப் பணிகள் மே 23-ஆம் தேதி தொடங்கப்படும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, அணு ஆயுத மையங்கள் எதுவுமே இல்லாத நிலையை வடகொரியா எட்டிவிடும் என்றார் அவர்.

வடகொரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பங்கியி-ரி என்ற இடத்தில்தான் அந்நாட்டின் முக்கியமான 6 அணு ஆயுத சோதனை மையங்களும் உள்ளன. பூமிக்கு அடியில் சுரங்கங்களை அமைத்து இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சுரங்கங்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அழிக்க இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது.

அணு ஆயுத சோதனைகளும், பொருளாதாரத் தடைகளும்: முன்னதாக, கடந்த ஆண்டு வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது அடுக்கடுக்காக பொருளாதாரத் தடைகளை விதித்தன. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சுட்டுரையில் தனிப்பட்ட முறையில் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டனர். கொரிய தீபகற்பத்தை ஒட்டிய கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன.

எனினும், கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட-தென் கொரிய வீரர்கள் இணைந்து விளையாடினர். இதன் தொடர் நிகழ்வாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரு முறை சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

பதற்றம் தணிந்தது

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தென் கொரிய அதிபர் மூன் ஜோயை, கிம் ஜோங் உன் அண்மையில் சந்தித்துப் பேசினார். இதனால், பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படும் அளவுக்கு வடகொரியா இறங்கி வந்தது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, வடகொரியா சென்று கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாம்பியோ, "வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட்டால் அந்நாட்டுக்குப் பொருளாதாரரீதியான உதவிகளைச் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது' என்று அறிவித்தார். இந்நிலையில், அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிக்க வடகொரியா முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் வரவேற்பு

வடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "வடகொரியாவுக்கு நன்றி, இது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை.  வடகொரிய அதிபரை சந்திக்க இருக்கும் எனக்கு நல்லதொரு வரவேற்பை அளித்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து